செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்… ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு, விசாரணை என அரசியல் களம் பரபரப்பாக மாறியது. செந்தில் பாலாஜி, அவரது தனி உதவியாளர் உள்ளிட்ட 4 பேர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆனால் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படும். அதில் உரிய நேரத்தில் ஆஜராக வேண்டும். இறுதியில் வழங்கப்படும் தீர்ப்பை ஒட்டி செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேசமயம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, பண மோசடி புகார் தொடர்பாக சிலர் சமரசம் ஆனதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழல் மீண்டும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.