பிரிட்டன்: இதுவரை இல்லாத வகையில் முக்கியப் பொறுப்புகள்… அதிரடிகாட்டும் லிஸ் ட்ரஸ்!

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவையின் மிக முக்கிய 4 பொறுப்புகளில் இங்கிலாந்தைப் பூர்வீகமாகக்கொண்ட ஒருவர்கூட இடம்பெறவில்லை. பிரிட்டனின் வரலாற்றுப் பக்கங்களில் இப்படி நிகழ்வது இதுவே முதன்முறை என்கிறார்கள்.

பிரிட்டனின் நிதித்துறை அமைச்சராக குவாசி குவார்டெங் என்ற கானா நாட்டு வம்சாவளி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிரிட்டனின் முதல் கறுப்பின நிதியமைச்சர். ஜேம்ஸ் கிளவர்லி வெளியுறவு அமைச்சராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இவர் அந்நாட்டின் முதல் கறுப்பின வெளியுறவு அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லிஸ் ட்ரஸ்

அதேபோல, லிஸ் ட்ரஸின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியான சுயெல்லா பிரேவர்மேனும் (Suella Braverman), அலோக் ஷர்மாவும் (Alok Sharma) இடம்பெற்றுள்ளனர். யார் இவர்கள்… இதற்கு முன்பு பிரிட்டனில் இவர்களின் பங்களிப்பு என்ன?

47 வயதான சுயெல்லா பிரேவர்மேன் லண்டனில் பிறந்து வளர்ந்த பாரிஸ்டர். இவர் தென் கிழக்கு இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய வம்சாவளியான ப்ரீத்தி படேலின் இடத்தைத் தற்போது இவர் கையிலெடுத்திருக்கிறார். ப்ரீத்தி படேல், லிஸ் ட்ரஸ்ஸின் பதவியேற்பின்போது தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

பிரிட்டனின் போலீஸ் மற்றும் இடம்பெயர்வு பொறுப்புகளை பிரேவர்மேன் கையாளவிருக்கிறார்.

55 வயதான அலோக் ஷர்மா ஆக்ராவில் பிறந்தவர். இவர் தற்போது பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் நடந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்தியதற்குப் பாராட்டுகளைப் பெற்றார் அலோக்.

Alok Sharma

“தொடர்ந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று அலோக் ட்வீட் செய்திருக்கிறார்.

அலோக் ஷர்மா அரசியலில் நுழைவதற்கு முன்பு கார்ப்பரேட் துறையில் பணியாற்றிவந்தவர். கடந்த ஆண்டு நடந்த ஐ.நா பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் சொல்லப்பட்ட தீர்வுகளைத் தற்போது செயல்படுத்திவருகிறார்.

பிரிட்டனின் கன்சர்வேடிவ் பார்ட்டி, அதன் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்டிவரும் பன்முகத்தன்மையை அனைவரும் பாராட்டிவருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, பிரிட்டன் அரசாங்கத்தில் பெரும்பாலும் இங்கிலாந்தைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். 2002-ல்தான் பிரிட்டன் அதன் முதல் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பால் படேங் என்பவரை கருவூல அமைச்சராக நியமித்தது. எனவே, பிரிட்டனின் தற்போதைய இந்த அமைச்சரவை பேசுபொருளாகியிருக்கிறது.

ஆனாலும் கன்சர்வேட்டிவ் பார்ட்டியின் பன்முகத்தன்மை ஒருபுறம் வெளிப்பட்டிருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 25% பெண்களும், 6% சிறுபான்மையினர் மட்டுமே இருப்பது கவனிக்கப்படவேண்டிய உண்மை என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.