உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற பெரிய தேர்பவனி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழ்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும், புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டுதிருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா பெரிய தேர் பவனி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேர் பவனியையொட்டி, தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு கூட்டுபாடல் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. ஆதனைத் தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு பேராலய முகப்பில் இருந்து உத்திரியமாதா, அந்தோணியார் உட்பட சிறிய தேர்கள் முன்னே வர அதற்குப் பின்னால் பெரிய சப்பரத்தில் புனித ஆரோக்கிய மாதா அன்னையின் தேரை பக்தர்கள் சுமந்து வந்தனர்.
பெரிய தேரானது வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது திடீரென்று மழை கொட்டியது. கொட்டும் மழையில் இருபுறமும் நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மாதா தேர் மீது மலர்களை தூவி தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றினர். வேளாங்கண்ணி மாதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 8.09.2022 காலை பேராலயத்தில் கூட்டுபாடல், மற்றும் திருப்பலிகள் நடைபெற உள்ளன.
ததனைத் தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு புனித மரியாளின் திருஉருவம் பதித்த கொடி இறக்கப்பட்டு வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா கோலாகலமாக நிறைவு பெறுகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று 8.09.2022 நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM