பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்கக்கூடாது!: லட்சக்கணக்கான மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் திமுக அரசின் சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

நெல்லை: லட்சக்கணக்கான மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் திமுக அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் ரூ.74.24 கோடி மதிப்பீட்டில் 29 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.156.28 கோடியில் 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ரூ.15 கோடியில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்:

பொருநை நாகரீகத்தின் பெருமையை கூறும் வகையில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும்.

ரூ.7 கோடியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா:

மணிமுத்தாறு அணை அருகே ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பூங்கா அமைக்கப்படும்.

ரூ.370 கோடியில் நெல்லையில் மேற்கு புறவழிச்சாலை:

நெல்லையில் மேற்கு புறவழிச்சாலை ரூ.370 கோடியில் 3 கட்டங்களாக அமைக்கப்படும். தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டங்களாக அமைந்துள்ளன.

பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்கக்கூடாது:

பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கக்கூடாது, தீர்க்கப்படாத பிரச்சனை என்று எதுவும் இருக்கக்கூடாது. தீர்க்கப்படாத பிரச்சனையை தீர்ப்பதற்கு அனைத்து தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2023க்குள் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு:

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம் 2023க்குள் நிறைவேற்றப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 20,340 ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் சாதனை:

லட்சக்கணக்கான மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் திமுக அரசின் சாதனை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அனைத்து குடும்பங்களையும் அக்கறையோடு கவனிக்கக்கூடிய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.