இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சிலவாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக பாகிஸ்தான் வடக்கு மலைப் பகுதியில் உள்ள பனியாறுகள் உருகியதும் அதிக அளவு பருவ மழையுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால் அந்நாட்டில் மூன்றில்ஒரு பகுதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது. 22 கோடி மக்கள் தொகை கொண்டபாகிஸ்தானில் 3 கோடி மக்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள்வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாகிஸ்தானை மறு கட்டமைக்கவும் மக்கள் நிவாரணப் பணிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தெற்கில் உள்ள சிந்து மாகாணம் மழை, வெள்ளத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரி உடையும் அபாயத்தில் உள்ளது. இதையொட்டி சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள்நேற்று காலையில் கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில் 8 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,343 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தனர். இந்நிலையில் வரும் மாதத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என ஐ.நா. அகதிகள் முகமை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ள பகுதிகளில் 64 லட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தான் அரசு அளித்துள்ள புள்ளிவிவரப்படி, தற்போதைய பெருவெள்ளத்தில் 16 லட்சம் வீடுகள், 5,735 கி.மீ. நீள சாலைகள் மற்றும் ரயில் பாதைகள், 246 பாலங்கள், தொலைத் தொடர்பு கட்டமைப்புகள், 7,50,000 கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.