விருதுநகரில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பெருமைக்குரிய பழைமையான கோயிலான சொக்கநாத சுவாமி கோயிலில் ஆவணி பிரம்மோற்சவத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோயிலின் ஆவணி பிரம்மோற்சவப் பெருந்திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டிக் கடந்த ஒருவார காலமாக தினமும் சுவாமி, மீனாட்சியம்மனுடன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-ம்நாள் திருவிழாவில் சொக்கநாதசுவாமி, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சொக்கநாத சுவாமி, மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9.05 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை நகரசபை தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கிவைத்தனர்.
இதில் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்ட பக்தர்கள் திருத்தேரை, ‘சிவாய நம’, ‘சிவாய நம’ எனும் பக்தி கோஷங்களுடன் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மேலரதவிதி திருப்பத்தில் எந்திரங்கள் உதவியுடன் திருத்தேர் நகர்த்தப்பட்டு தேரோட்டம் தொடர்ந்தது. ரதவீதிகள் வழியே சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சொக்கநாதசுவாமி, மீனாட்சியம்மன் திருத்தேர் மதியம் 1 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏற்கெனவே முன்னேற்பாடுகள் நடந்திருந்த நிலையில் அனைத்து வீதிகளிலும் திருத்தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தேர்த் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி உட்படப் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று 10-ம்நாள் விழாவையொட்டி, காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கொடியிறக்கமும் 10-ம் தேதி உற்சவர் சாந்தியும் நடைபெறுகின்றன.