பவர்ஃபுல் அதிகாரம்:
ஒரு ஆட்சியில் அமைச்சர் பதவி எப்படி அதிகாரம் மிக்கதோ… அந்த அளவுக்கு திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர் பதவி மிகவும் வர்ஃபுல்லானதாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் கட்சியின் வட்ட, கிளை செயலாளர் முதல் மாவட்ட துணைச் செயலாளர் நியமனம் வரை இவர் கைக்காட்டுபவர்தான் இந்த பொறுப்புகளுக்கு வர முடியும். மா.செ,க்களின் ஆசி பெற்றவர்களுக்கோ அல்லது மா.செக்களுக்கோதான் பெரும்பாலான நேரங்களில் தேர்தலில் போட்டியிட எம்பி., எம்எல்ஏ சீட் எளிதில் கிடைக்கிறது. கட்சித் தலைமையே மாவட்டத்தில் இப்பதவியில் இருப்பவரை கேட்டுதான் எந்த முடிவையும் எடுக்கும்.
இவ்வளவு செல்வாக்குமிக்க பதவிக்கு ஆளும்கட்சியான திமுகவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது மா.செ. பதவியை பிடித்துவிட வேண்டும் என்று கடினபிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றனராம் உடன்பிறப்புகள். இந்தப் பதவியை பிடிப்பதில் சில மாவட்டங்களில் ரத்தக்களரியே நடக்க வாய்ப்புள்ளதாக தலைமைக்கு ரிப்போர்ட் போகும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாம்.
லிஸ்ட் தயார்:
உட்கட்சி ஜனநாயக முறைப்படி, மா.செ., பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதென்றாலும், யார் யாரையெல்லாம் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்பதை திமுக தலைமை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டராம். தற்போது பொறுப்பில் உள்ள மா.செ.,க்களின் பிளஸ், மையினஸ்களை ஆராய்ந்து கட்சியின் ஐடி விங்க் மற்றும் உளவுத் துறை அளித்துள்ள விிரிவான ரிப்போர்ட்டின் அடிப்படையில் புதிய மாவட்டச் செயலாளர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளாராம் ஸ்டாலின்.
இவர்களில் கட்சிக்காக ஒத்தை ரூபாய்கூட செலவு செய்ய தயாராக இல்லாதவர்கள், இந்த பதவியை பற்றி தரக்குறைவாக பேசி வருபவர்கள், கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பினாமிகளின் பெயரில் பணம் கொழிக்கும் தொழில்களை செய்து வருபவர்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள மா.செ.க்களுக்கு கல்தா தரப்பட உள்ளதாம். இந்த வகையில் மொத்தம் 25 மா.செ.க்கள் வரை அதிரடி பதவியில் இருந்து தூக்கிய எறியப்பட உள்ளனராம். இந்த களையெடுப்பில் கொங்கு மண்டலத்தில்தான் மா.செக்கள் மாற்றம் அதிக அளவில் இருக்குமாம்.
ஓஙகும் உதயநிதியின் கை:
அதேசமயம், 2021சட்டமன்ற தேர்தலிலும், அதனை தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பொறுப்புக்கும் வந்துள்ளனராம். அத்துடன் இளைஞரணியின் தொடர் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளதால், இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினை ஊக்குவிக்கும் நோக்கிலும், கட்சியில் அவரது பலத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த முறை மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் கிட்டதட்ட 50% சதவீதம் அளவுக்கு இளைஞரணியை சேர்ந்தவர்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்பதுதான் அறிவாலய வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாப்பிக்.
சீனியர்கள் கோபம்:
ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது அவருக்கு வலுசேர்க்கும் நோக்கில், இந்த அணியை சேர்ந்தவர்களே பெரும்பாலான மாவட்டங்களுக்கு செயலாளர்களாக நிமமிக்கப்பட்டனர். கருணாநிதியின் அதே பாணியில் தற்போது ஸ்டாலின் செயல்பட்டாலும், மா.செ.க்கள் நியமனத்தில் உதயநிதியின் கை ஓங்குவதை விரும்பாத கட்சியின் சீனியர்கள் சிலர் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அறிவாலய வட்டாரத்தி்ல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திமுகவுக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 70க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் இருப்பதும், கட்சியின் சீனியர் அமைச்சர்களே பெரும்பாலும் மா.செ.க்களாக பொறுப்பு வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.