புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் பயன்படுத்த முடியாத ஆயுதங்கள், வெடிமருந்துகள் 14 ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. தற்போதைய தேவையான ஆயுதங்களின் பட்டியலை டிஜிபிக்கு அனுப்பும் பணியும் நடக்கவில்லை. ஆயுத பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தணிக்கைத் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
புதுவையில் வர்த்தகத்தின் முக்கியப் பகுதியாக விளங்கும் நேரு வீதியில்தான் புதுவை மத்திய சிறை, கடந்த 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைந்தது. வர்த்தகப் பகுதிக்கு நடுவே அமைந்த சிறைச்சாலையால் இப்பகுதி நெருக்கடியானது. அதனால், நகரிலிருந்து ஒதுக்குப்புறமான கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டில் புதிய சிறைச்சாலை அமைந்தது.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையின் பிரதான வாயில் மற்றும் சிறைச்சாலை வளாகத்தின் வெளிப்புற வளையத்தில் உள்ள நான்கு கோபுரங்கள் புதுச்சேரி ஆயுதப்படை வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் ஆயுதப்படை தரப்பால் தரப்பட்டு அந்தந்த அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்தன. இரண்டாவது பிரதான வாயில் சிறைத்துறையின் அதிகாரிகளால் பாதுகாக்கப்படுகிறது.
புதுச்சேரியில் சிறைச்சாலை விதிகளின் படி சிறைத்துறையின் செயல்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் (உதவி கண்காணிப்பாளர் முதல் சிறைக்காவலர் வரை) சிறை வளாகத்தின் பாதுகாப்புக்கு போதிய எண்ணிக்கை ஆயுதங்கள், வெடிமருந்துகள் தரப்படவேண்டும். விதிகளின்படி சிறை அலுவலர்கள் மற்றும் உதவி சிறை அலுவலர்களுக்கு 380 ரிவால்வர்களும், உதவி சிறை அலுவலர் பதவிக்கு கீழே உள்ள செயற் படையின் மற்ற உறுப்பினர்களுக்கு 410 கைத்துப்பாக்கிகளும் தரப்படவேண்டும்.
தற்போது சிறைத்துறையில் இதுதொடர்பாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை ஆய்வு செய்தது. அதில் கிடைத்த விவரங்கள்: சிறைச்சாலை விதிகளின் படி ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் அதற்கு தொடர்புடைய கணக்குப் பதிவேடுகளை முதன்மை சிறைக்காவலர் பராமரிக்கவேண்டும். விதிகளில் வரையறுத்தப்படி இதுதொடர்பான முறையான கணக்குகள், பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை என்பது தணிக்கையில் கண்டறியப்பட்டது.
கொடுக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் விவரங்கள், தயாரிப்பு, ஆயுத வரிசை, தயாரிக்கப்பட்ட ஆண்டு, யாருக்கு தரப்பட்டது, இருப்பு சரிபார்ப்பு அறிக்கை ஆகியவை பதிவேட்டில் இல்லை. ஆயுதங்கள், வெடிமருந்துகளின் தேவையை மதிப்பீடு செய்து அதற்கான தேவைப்பட்டியலை புதுச்சேரி டிஜிபிக்கு அனுப்பலாம். தனியான நிதி ஒப்புதலை பெற்று தேவைக்கு ஏற்ப நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம். இத்தேவையை பூர்த்தி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை.
2008ம் ஆண்டு முதல் பயன்படுத்த முடியாத ஆயுதங்கள் சிறைச்சாலையில் கடந்த 14 ஆண்டுகளாக உள்ளன. சிறைச்சாலையில் பயன்படுத்த முடியாத ஆயுதங்கள், ஆயுள் காலாவதியான வெடிமருந்துகள் உள்ளன. குறிப்பாக கைத்துப்பாக்கி 24, தோட்டாக்கள் 491, தளவாடங்கள் 1230, நீள் துப்பாக்கி 20 ஆகியவை பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயன்படுத்த முடியாத ஆயுதங்களை அப்புறப்படுத்தவும், புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்முதல் செய்ய கருத்துருக்கள் அனுப்ப சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தணிக்கைத்துறையில் தெரிவித்துள்ளனர்.