அண்ணாமலையுடனான செல்ஃபி; ராகுல் காந்தியின் பாதயாத்திரை திட்டம்; கோயில்களில் ஆன்மீக சுற்றுலா… என ட்ராவல் மோடில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தை அவரின் காரைக்குடி பயணத்தின் போது போனில் தொடர்பு கொண்டோம். “சார் சமீபத்தில் ஓடிடி-யில் என்ன பார்த்து கொண்டிருக்கீங்க…” என்ற கேள்வியுடன், சமகால அரசியல் நிகழ்வுகளோடு நடந்த உடையாரல் இதோ…
“’தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது’ என்று சொல்லி இருக்கிறீர்களே?”
“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு ‘நோ மேன்ஸ் லேண்ட்’-டாக இருக்கிறது. காரணம் அரசாங்க அதிகாரமோ, எங்களை சார்ந்தவர்கள் அமைச்சராகவோ இல்லை. எனவே அரசாங்கத்தில் எங்களுக்கு கூட்டு பொறுப்பும் கிடையாது. ஆனால், கூட்டணி வைத்திருப்பதால் முழுமையான எதிர்கக்கட்சியும் கிடையாது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன்தான் கட்சி செயல்பட வேண்டியிருக்கிறது”
“ஒரு தேசியக் கட்சி கட்டுப்பாடுகளுடன் தான் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறதா?”
“இன்னொருவர் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்பதாக இதற்கு பொருள் இல்லை… ஆனால், நாங்கள் கூட்டணி வைத்திருப்பதால் அந்த கூட்டணியை மதிக்க வேண்டி இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் ஒரு விசித்திரமான அரசியல் கட்டுப்பாட்டிற்குள்தான் காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டி இருக்கிறது”
“காங்கிரஸ் எந்தெந்த மாநிலங்களில் பலமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பலவீனமடையச் செய்யும் அரவிந்த் கெஜ்ரிவாலை தமிழகம் அழைத்து வருகிறாரே உங்கள் கூட்டணி கட்சி முதல்வர்?”
“அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்து வருகிறாரோ இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒரு கட்சியின் பலம், பலவீனத்துக்கு முழு பொறுப்பு அந்த கட்சியை சார்ந்தவர்கள்தான். தேசிய அளவில் இந்தி, இந்துத்துவா கொள்கைக்கு மாறாக எங்களால் ஒரு மாற்று கொள்கை கொடுத்து, எங்கள் தலைமையில் மக்களை அணி வகுக்க முடியவில்லை என்பதை ஏற்று கொள்கிறேன். அதே நேரத்தில் சில மாநில தலைமைகளும் அந்தந்த மாநிலங்களில் வலுவாக செயல்படுகின்றன. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸில் லோக்கல் லீடர்ஷிப் ஸ்ட்ராங்கா இருக்கிறது. கேரளாவில் தேர்தலில் தோற்றாலும் கட்சி பலமாக இருக்கிறது. லோக்கல் லீடர்ஷிப் ஸ்ட்ராங்கா இல்லாமல் கட்சி அமைப்பு இல்லாமல் இருந்தால் அது வீக்காக தான் இருக்கும்.
“அப்படி என்றால் தமிழ்நாட்டில் பலவீனமாகத்தான் காங்கிரஸ் இருக்கிறதா?”
“ஆம்… தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சியை விட்டோம். அதன் பின் கூட்டணியை நம்பித்தானே தேர்தலில் நிற்கிறோம். 1989-ல் ஒரே ஒரு முறைதான் தனியா நிற்க முயற்சி செய்தோம். அதிலும் பலன் இல்லை. தமிழ்நாட்டில் முதலமைச்சரை முன்னிருத்திதானே கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெறுகிறார்கள்”
“நூறு ஆண்டு பாரம்பரிய காங்கிரஸில் முதலமைச்சராக முன் நிறுத்த ஆள் இல்லையா?”
“1989-ல் திரு.மூப்பனாரை நிறுத்திய பிறகு அப்படி யாரையும் எங்கள் கட்சியின் சார்பில் நிறுத்தவில்லை. வருங்காலத்தில் இவர் தான் முதலமைச்சர் ஆவர் என்று சொல்ல கூடிய அளவிற்கு ஒரு தலைவரும் எங்களுடைய இயக்கத்திலிருந்து உருவாகவில்லை. இது தான் எதார்த்த உண்மை. இதுவே எங்கள் வளர்ச்சிக்கு ஒரு பின்னடைவாக இருக்கிறது”
“அந்த இடத்திற்கு கார்த்தி சிதம்பரம் என்றைக்கு வருவார்?”
“நான் அந்த இடத்திற்கு வருவேனா வர மாட்டேனா என்று என் தலையெழுத்தில் என்ன எழுதி இருக்கிறதோ யாருக்கு தெரியும்?. காங்கிரஸ் கமிட்டி பதவி என்பது நியமன பதவி. அந்த நியமனத்திற்கு வாய்ப்பு கிடைத்தால் எடுத்து செய்வதற்கு தயராக இருக்கிறேன் என்று இரண்டு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டுத்தான் இருக்கிறேன். ஆனால், என் ஸ்டைல் எல்லோருக்கும் ஒத்து போகுமா, நான் செயல்படும் விதம் டெல்லியில் இருக்கும் தலைமை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. எனக்கென்று மாறுபட்ட நடைமுறை இருக்கிறது. அது எனக்கும் தெரியும், மற்றவர்களுக்கும் தெரியும். அந்த மாறுபட்ட நடைமுறை ஒரு தலைமைக்கு வர வேண்டுமா என்பது மற்றவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”
“காங்கிரஸிலேயே நிறைய கோஷ்டி பூசல் இருக்கும் போது, அ.தி.மு.க-வில் நடக்கும் விவகாரங்களை விமர்சிப்பது நியாயமா?”
“கோஷ்டி பூசல் என்பது மிகைப்படுத்தப்படக் கூடிய மிகப்பெரிய பிரச்னை கிடையாது. கட்சி என்றிருந்தால் பல பேர் இருப்பார்கள். அதில் பல கருத்துகள், பல ஆசைகள், பல எதிர்பார்ப்பு இருக்கும் போது வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படி இருக்கும் போது தான் கட்சி ஜனநாயக ரீதியாக உயிரோட்டமாக இருக்கிறது என்று அர்த்தம். அ.தி.மு.க-வில் இப்போது தலைமைக்கு போட்டி வந்துவிட்டது. போட்டியே இல்லாமல் எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனால் போட்டிக்கு பின்னர்தான் செல்வி.ஜெயலலிதா தலைமை ஏற்றார். ஜெயலலிதா காலத்திற்கு பின் ஒரு போட்டி வந்திருக்கிறது. அவர்களுக்குள் போட்டி போட்டு தீர்த்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இதை ஒரு அரசியல் விமர்சகனாக தான் என் கருத்தை முன்வைக்கிறேன்”
“சசிக்கலாவிடம் கட்சி போகும் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்களா?”
“முன்பு எதிர்பார்த்தேன்…ஆனால், என் கணிப்பு தவறு என்பதை ஏற்று கொள்கிறேன். சசிகலாவிற்கு அந்த துணிச்சல் இல்லை என்பது இப்போது வெளிப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் விமர்சகர் என்கிற முறையில் அந்த கணிப்பு சொன்னேனே தவிர இது என் தனிப்பட்ட விருப்பம் கிடையாது”
“டிவிட்டரில் அதிகம் செயலாற்றும் நீங்கள் அண்ணாமலை, பி.டிஆர். வார்த்தை போரை எப்படி பார்க்கிறீர்கள்?”
“நிச்சயமாக அது தவிர்க்க வேண்டியது. கொள்கை ரீதியாக, கட்சி ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தால் அதை நாகரீகமான முறையில் விமர்சனம் செய்து கொள்ள வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது ஒரு அமைச்சருக்கும், கட்சி தலைவருக்கும் பொருந்தாது. இது அரசியல் நாகரிகமும் கிடையாது. இருவரையும் தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். அதை தவிர்த்திருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.”
“அண்ணாமலையுடனான செல்ஃபி ட்ரெண்டிங்கில் இருக்கிறதே, உங்கள் பயணத்தின் போது ஒரு மூத்த தலைவராக அவருக்கு ஏதும் அரசியலில் டிப்ஸ் கொடுத்தீர்களா?”
“அவருக்கு டிப்ஸ் கொடுக்க நான் என்ன கோச்சா… இருவரும் ஒரே ஏர்பிளைனில் இருந்தோம். எதார்த்தமா பார்த்து பேசி கொண்டிருக்கும் போது ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?”
“உங்கள் தந்தைபோலின்றி, நீங்கள் ‘நான் ஓர் இந்து’ என்று அடிக்கடி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களே… இதை உங்கள் திராவிட இயக்க நண்பர்கள் ஏற்றுக்கொள்வார்களா?”
“கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களிடம் முற்போக்கு சிந்தனை கிடையாதா… இந்து என்றால் பிற்போக்குவாதி என்று யார் சொன்னது. கோயில், வழிபாடு என இருந்தாலும் சமுதாயரீதியாக, விஞ்ஞானரீதியாக முற்போக்கு சிந்தனை உள்ளவன் நான். இன்றைக்குக்கூட நான் கோயிலுக்குப் போனேன். என்னுடன் திராவிட முன்னேற்றக் கழக நண்பர்களும் வந்தனர். தி.மு.க-காரர்கள் கோயிலுக்குப் போவதில்லை, கடவுள் நம்பிக்கை இல்லை என்பதெல்லாம் பழைய தியரி.
“`பிரதமர் மோடிக்கு இணையான தலைவர் நாட்டில் இல்லை’ என்கிற பா.ஜ.க-வினரின் வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“மோடி அளவுக்கு, மோடிக்கு இணையாகச் சொல்லும் அளவுக்கு வேறு எந்தத் தலைவரும் இல்லை என்கிற அவர்களது வாதம் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொள்கிறேன்.”
`காங்கிரஸில் அப்படி இல்லை என்பதை காங்கிரஸார் ஆய்வு செய்ததுண்டா”
“அப்படி ஒரு தலைவர் காங்கிரஸில் இல்லை என்பது பின்னடைவுதான். காங்கிரஸ் தலைமை குறித்து ஒரு தெளிவு வர வேண்டும். அது குறித்து தீர்க்கமான முடிவு வருவதுதான் கட்சிக்கு நல்லது. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பெரும்பாலானோர் ‘ராகுல் காந்திதான் தலைவராக வர வேண்டும்’ என்று விரும்புகிறார்கள். ஆனால், அவர் தலைமை ஏற்பாரா, ஏற்க மாட்டாரா என்பதெல்லாம் அவரைத்தான் கேட்க வேண்டும்.”
“களத்தில் இறங்கி அரசியல் செய்யாமல், மேல்தாட்டு நிலையிலேயே காங்கிரஸில் இருக்கும் தலைவர்கள் சிலர் இயங்கி கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?”
“களத்தில் அரசியல் செய்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. களம் என்றால் என்ன? கட்சி எல்லா இடத்திலும் இருக்கிறது. எல்லா இடத்திலும் கட்சி செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. பாஜக ஜெயிக்கிறது என்றால், இந்தி பேச கூடிய மாநிலத்தில் அவர்களின் இந்துத்துவா கொள்கை வேரூன்றி விட்டது. அதனால் அவர்களுக்கு வெற்றி வருகிறது. எங்களுக்கு அந்த இடத்தில் அமைப்பு ரீதியாக ஒரு பின்னடைவு வந்திருக்கிறது. தேசிய அளவில் எல்லா மாநில கட்சிகளையும் ஒன்றினைத்து கூட்டணி அமைத்து அதற்கு அச்சாணியாக காங்கிரஸ் இருந்தால், என்னை பொறுத்தவரைக்கும் பாஜக-வை தேர்தலில் தோற்கடிக்க வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பல மாநில கட்சிகளை ஒற்றிணைத்து ஓர் அணியில் கொண்டு வருவது அவ்வளவு சாதாரண வேலை கிடையாது. அந்த சிரமமான வேலையை அரசியலில் அனுபவம் உள்ளவர்கள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.
“மாநில கட்சிகளை ஒன்றிணைத்துத்தான் பாஜக-வை எதிர்க்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறதா?”
“உண்மைதான்… காங்கிரஸ் நேருக்கு நேர் தனியாக போட்டியிட்டால் வட இந்தியாவில் சிரமப்படதான் செய்யும். மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதுதான் அரசியல் சாதூர்யம்”
“இப்போது ஓடிடி-ல் என்ன பார்த்துட்டு இருக்கீங்க. அரசியலில் இயங்கி கொண்டே இதற்கெல்லாம் எப்படி நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?”
“டெல்லி க்ரைம்’… நல்லா இருக்கு.. பாதி நேரம் பிளைன்லேயே பறந்துட்டு இருக்கேன். அங்க பொழுது போவது இந்த மாதிரி படம் பார்க்கும் போதுத்தான்”