தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு 16 வயதில் அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. தீம் மியூசிக் என்றாலும் சரி, காதல் தோல்வி பாடல்களானாலும் சரி ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது யுவனின் பாடல்கள்தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தன் குரலால் தனி முத்திரை பதித்தவர். தங்கள் வலிகளை மறக்கடிக்கச் செய்யும் டாக்டர் என யுவன் சங்கர் ராஜாவை ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு.
சமீபத்தில், சினிமாத்துறையில் யுவனின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை சத்யபாமா பல்கலைக் கழகம் வழங்கி கௌரவித்தது.
80’ஸ், 90ஸ், 2k கிட்ஸ் எனப் பல தலைமுறையினரும் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களாக இருப்பது யுவனின் தனிச்சிறப்பு. அந்த வகையில் தற்போது கூட காதல் வளர்தேன், நினைத்து நினைத்து, கண்பேசும் வார்த்தைகள் போன்ற யுவனின் பாடல்களைக் குறிப்பிட்டு Dr. யுவனின் prescription என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக, தனது ரசிகர்களுக்கு என்று இசை நிகழ்ச்சியை நடத்த யுவன் முடிவு செய்துள்ளார். இதன்படி யுவன்-25 என்ற இசை நிகழ்ச்சி மலேசியாவில் மிகப்பிரமாண்டமாக நடைப்பெற்றது. மலேசியாவில் நடைபெற்ற அந்த இசை கான்சர்ட்க்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்துள்ளன. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை எனச் சொல்லப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சென்னையிலும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக சமீபத்தில் யுவன் அறிவித்திருந்தார். இந்த இசை நிகழ்ச்சிற்கு ‘யு & ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் யுவனின் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் விற்பனை முடிந்து, இந்நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.