பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 எனப் பிரித்து மூன்று தவணைகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2.85 கோடி விவசாயிகளில் 21 லட்சம் விவசாயிகள் தகுதியற்றவர்கள் என்று மாநில விவசாய அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி செப்டம்பர் 7 அன்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை தகுதியில்லாத விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை அவர்களிடமிருந்து மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். தகுதியற்றவர்களுக்கான காரணமாகக் கூறப்படுவது, கணவன்-மனைவி இருவரும் இந்த திட்டத்தின் பலனைப் பெறுவது மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் பலரும் இத்திட்டத்தில் இருப்பது உள்ளிட்டவைகளாகும்.
உத்திர பிரேதச விவசாய அமைச்சர் கூறியிருக்கும் இக்கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையாக இத்திட்டத்தினை அறிவித்தே மாபெரும் வெற்றி பெற்றது என்பது கவனிக்கத்தக்கது. அதோடு ஒரு கோடி விவசாயிகளுக்கு இத்திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24, 2019 அன்று, தொடங்கியதும் உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூரில் தான். சமீபத்தில் நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்கள் இத்திட்டத்தை அடிக்கடி குறிப்பிட்டு வாக்கு சேகரித்தனர் என்பதும் நினைவுக் கூரத்தக்கது. நிலைமை இவ்வாறு இருக்கப் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் நடந்துள்ள மோசடி மிக பெரிய எண்ணோடு உத்திரப்பிரதேசத்தில் இப்போது வெளியாகியிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் முறையான, நியாயமான ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளியே வருமா என்பதை வரும் காலம் பதில் சொல்லும்.