வீட்டிற்கு வீடு ரோபோக்களை கொண்டு செல்ல வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களும் டெக்னாலஜி வளர்ச்சியின் பலனை அடைய வேண்டும் என்ற இலக்கை குறிக்கோளாக கொண்டு விவசாயத்தில் பயன்படுத்தும் வகையில் அதிநவீன ரோபோக்களை தயாரிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்து கொண்டிருக்கிறார் இந்த சாதனை இளைஞர் பாலாஜி திருநாவுக்கரசு.
கிராமங்கள்தோறும் டெக்னாலஜியை பரப்புவோம் என்ற நோக்கில் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல்(village technology school) என்ற நிறுவனம் மூலம் ரோபோட்டிக்ஸ் மற்றும் டெக்னாலஜி சார்ந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகிறார் பாலாஜி.
அப்பா கார்பெண்டர், சாதாரண நடுத்தர குடும்பம், ஆனாலும் கனவுகளை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், அப்துல் கலாமே ரோல் மாடல் என ஜாலியாக நம்மோடு உரையாடினார் இந்த ரியல் வில்லேஜ் விஞ்ஞானி.
முதன்முதலில் அப்பா ஏர்கலப்பை செய்வதை பார்த்துதான் ரோபோ செய்யவேண்டும் என்று ஆர்வமே வந்தது. அப்படி 1999இல் 5வது படிக்கும்போது பொம்மையில் செய்ததுதான் முதல் ரோபோ என்று தன்னுடைய ரோபோ அனுபவங்களை அடுக்க ஆரம்பித்தார்.
பள்ளி , கல்லூரி என எல்லா இடங்களிலும் டெக்னாலஜி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது, புதிய புதிய மெஷின்களை கண்டுபுடிப்பதில் ஆர்வம் மிகுந்த பாலாஜி கண்டுபிடித்தவைகள் பல. இன்று டெஸ்லா பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்டோ பைலட் ஐடியாவை எட்டு வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தேன் என அசால்ட்டாக சொல்கிறார்.
014 ஆம் ஆண்டு MTech படிக்கும்போது விவசாயத்திற்கு உதவும் வகையில் அட்டானமஸ் டிராக்டர் புரோட்டோடைப் மாடல் செய்து அதற்காக மலேசியா பல்கலைக்கழகத்தில் சிறந்த இனோவேஷனுக்கான பரிசையும் பெற்றுள்ளார்.
இது போன்ற பல்வேறு ஐடியாக்களை உருவாக்கி அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா,துபாய், சீனா போன்ற பல்வேறு நாடுகளுக்கு சென்று அது குறித்து உரையாற்றி உள்ளார். நான்கிற்கும் மேலான விருதுகளையும் வென்றுள்ளதாக கூறுகிறார்.
தற்போது lilibot என்று சொல்ல கூடிய தொடக்கநிலை மாணவர்களுக்கான கற்கும் ரோபோ ஒன்றை உருவாக்கி சந்தையில் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் ரோபோட்டிக்ஸ் குறித்து கற்க நினைக்கும் தொடக்க நிலை மாணவர்கள் தாங்களாகவே அந்த ரோபோவை செய்து கொள்ள முடியும்.
வெளியில் பலருக்கு இதை விற்பனை செய்தாலும் அரசு பள்ளி என்று வந்து விட்டால் பணமா? நோ! நோ! என கறாராக சொல்கிறார் பாலாஜி. இது வரை பத்தாயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் மேல் இலவசமாக ரோபோட்டிக்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொடக்க நிலை பயிற்சி கொடுத்துள்ளதாக கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல் பொறுமையாக சொல்கிறார்.
மேலும் இளநிலை ரோபோட்டிக்ஸ் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவியாக How to make a robot? என்ற புத்தகம் உட்பட மூன்று புத்தகங்களை எழுதியுள்ளதாக கூறுகிறார்.இதன் மூலம் கிராமப்புறங்களில் இருப்பவர்களையும் கண்டுபுடிப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்ற தனது இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் பேசுகிறார் பாலாஜி.
சிம்பிளாக சிரித்து பேசி கொண்டிருந்த மனிதர் திடீரென்று சீரியசாகி அடுத்த கட்ட அறிவியல் வளர்ச்சியை பற்றி பேச தொடங்கிவிட்டார். தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியை கண்டே நாம் வாய் பிளந்து பார்த்து கொண்டிருக்கும் வேளையில் அதற்கு பிறகு DNA interfacing ரோபோட் டெக்னாலஜி வரும் என்று அழுத்தி சொல்கிறார்.
எதிர்காலத்தில் இந்த டெக்னாலஜி மூலமாக மனிதர்கள் யாராவது இறந்துவிட்டால் கூட அவர்களது டிஎன்ஏ-வை வைத்து அவர்களது குணநலன்களோடு கூடிய அவர்களை போன்ற ரோபோக்களை தயாரிக்க முடியும் என்கிறார். இதை தான் தற்போது எலான் மஸ்க் போன்றவர்கள் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்.
எப்படி இந்தியா போன்ற ஏழை மக்கள் அதிகமாக உள்ள நாட்டில் எல்லா வீட்டிலும் ரோபோட்ஸ் என்ற இலக்கை அடைய முடியும் என்று குழப்பத்தோடு நாம் கேள்வி கேட்க, கூலாக இருபது வருடத்திற்கு முன்பு மொபைல் போன்கள் எல்லார் வீட்டிலும் வரும் என்று நீங்கள் நினைத்தீர்களா?
ஆனால் அது சாத்தியமானது. அதே சூத்திரமே இதிலும் உதவும் என்கிறார். அதிக உற்பத்தி ஏற்படும்போது விலை குறைந்து எல்லார் வீட்டிலும் ஒரு ரோபோ என்ற இலக்கு கண்டிப்பாக சாத்தியமாகும்.
ஆனால், அரசும் இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு உதவ வேண்டும். எங்களை போன்ற நபர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கண்டுபுடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நன்றியோடு விடைபெற்றுக் கொண்டார்.