சென்னை : நடிகர் அஜித்குமார் தன்னுடைய சினிமா கேரியரில் 30 ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் மிகவும் அழகான ஹீரோவாக, அதிகமான ரசிகர்களை கவரும்வகையில் சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துள்ளார் அஜித்.
அந்த வகையில் அவரது சிறப்பான படமாக ஆசை படம் இருந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவலட்சுமியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் அஜித்.
நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தமிழில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை கடந்துள்ளார். இவரது ஆரம்பகால படங்களில் அதிகமாக சாக்லேட் பாய் கேரக்டர்களிலேயே இவரை காண முடிந்தது. இந்தப் படங்களில் மிகவும் க்யூட்டான கதாபாத்திரங்களில் இவர் நடித்து அதிகமான ரசிக்களை கவர்ந்திருந்தார்.
அமர்க்களம் படம்
இந்தப் படங்களின் வரிசையில் அமராவதி, பவித்ரா, ஆசை, வாலி போன்ற படங்களின் கேரக்டர்களை சொல்லலாம். இவரை முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக காட்டிய படம் என்றால் அது அமர்க்களம் தான். இந்தப் படத்தில் தான் இவருடன் ஷாலினி இணைந்து நடித்திருந்தார். இவர்கள் பின்பு காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.
சிறப்பான அறிமுகம்
முன்னதாக சாக்லேட் பாய் கேரக்டரில் அஜித் நடித்து அவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தப் படம் என்றால் அது ஆசை படம்தான். அந்தப் படத்தில் சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகிணி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். தன்னுடைய மனைவியின் தங்கை மீது ஒருவருக்கு ஏற்படும் ஆசை மற்றும் காமம் அவரை எந்த எல்லை வரை கொண்டு செல்லும் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.
அழகான அஜித் -சுவலட்சுமி காதல்
வசந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அஜித் மற்றும் சுவலட்சுமியின் காதல் மற்றும் அதையொட்டிய காட்சிகள் மிகவும் ப்ரெஷ்ஷாக அமைந்திருந்தன. ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தக் கேரக்டரில் மிகவும் துறுதுறுவென ரசிக்கும்படியான நடித்திருந்தார் அஜித்.
அஜித்தின் சிறப்பான வெற்றிப்படம்
இவரது முதல் படம் அமராவதி என்றாலும் சிறப்பான வெற்றியை கொடுத்தப் படம் என்றால் அது ஆசைதான். இந்தப் படம் வெளியாகி இன்றைய தினம் 27 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் படத்தில் வசந்த், அஜித்தை வைத்துதான் இயக்க வேண்டும் என்று அவர் நடிகராவதற்கு முன்பே முடிவு செய்து விட்டராம்.
அஜித்தை பிக்ஸ் செய்த வசந்த்
அஜித் நடிக்க வருவதற்கு முன்னதாக நடித்திருந்த வேட்டி விளம்பரம் ஒன்றில் அவரை பார்த்து, அவரை தனது ஆசை படத்தின் நாயகனாக அறிமுகம் செய்ய வேண்டும் அவர் பிக்ஸ் செய்திருக்கிறார். ஆனால் ஆசை படத்திற்கு முன்னதாகவே அமராவதி மற்றும் பவித்ரா படங்களில் நடித்துவிட்டார் அஜித்.
பிரகாஷ்ராஜ் வில்லத்தனம்
ஆசை படத்தில் அஜித்தின் துறுதுறுப்பு, சுவலட்சுமியின் அழகு, பிரகாஷ்ராஜின் வில்லன் அனைத்துமே கவனிக்கப்பட்டன. தன்னுடைய மச்சினியான சுவலட்சுமியை அடைவதற்காக தன்னுடைய மனைவியை கொல்லும் பிரகாஷ்ராஜ், தொடர்ந்து சுவலட்சுமியின் காதலை தெரிந்துக் கொண்டு அஜித்தை மற்றவர்களுக்கு கெட்டவனாக காட்டும்வகையில் வில்லத்தனம் செய்வார்.
படத்தின் ஹைலைட்
இதைப் புரிந்துக் கொண்டு அஜித் அதிலிருந்து வெளிவர மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவரது தவிப்பு உள்ளிட்டவை படத்தின் ஹைலைட். ஆனாலும் படத்தில் ராணுவ வீரராக வரும் பிரகாஷ்ராஜின் சைக்கோ தனமான வில்லத்தனம் படத்தில் அதிக கவனத்தை பெற்றது.
சிறப்பான க்ளைமாக்ஸ்
இறுதியில் பிரகாஷ்ராஜை கொல்வதற்கு பூர்ணம் விஸ்வநாதன் செய்யும் செயல்கள் சிறப்பாக அமைந்தன. இந்தப் படம் இப்போது பார்த்தாலும் மிகவும் ப்ரெஷ்ஷாக, ரசிக்கும்படியாக காணப்படுகிறது. படம் வெளியாகி 27 ஆண்டுகளை கடந்த நிலையிலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக அமைந்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பு.
27 ஆண்டுக் கொண்டாட்டம்
இந்தப் படம் கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி வெளியான நிலையில் இன்றைய தினம் படம் தனது 27வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.