நெல்லை: நெல்லையில் அமைய உள்ள பொதியை அரசு அருங்காட்சியகம் அருகே முத்தமிழறிஞர் அறிஞர் கலைஞர் பெயரில் நூலகம் கட்டித் தர வேண்டும் என நெல்லையில் நடந்த சபாநாயகர் அப்பாவு பேசினார். நெல்லையில் இன்று நடந்த அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தி முதல்வர் ஸ்டாலின். இன்று அவர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக உள்ளார். இந்தியாவிலேயே நான் சிறந்த முதல்வர் என்பதை விட தமிழகம் சிறந்த மாநிலம் என்று சொல்வதைத் தான், தான் விரும்புவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியில் எனது அரசு என்று சொல்வதை விட, நமது அரசு என்று சொல்வதே அதிகம். முதல்வராக அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து குறுகிய காலத்தில் தமிழகம் தொழில் வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை தமிழகம் தொழில் வளர்ச்சியில் 14வது இடத்தில் இருந்தது. அதை மாற்றுவதற்காக தமிழக முதல்வர் இரவு, பகலாக உழைத்து ரூ.3.50 லட்சம் கோடி நிதியை பெற்று வந்து ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளார். இப்போது தமிழகம் தொழில் வளர்ச்சியில் 3வது இடத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டதோடு, நமது நெல்லையிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நெல்லை மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட அணைகளில் பெரும்பாலான அணைகளை கட்டித் தந்தது, முத்தமிழிறஞர் கலைஞர் தான். வெள்ள நீரை வறட்சி பகுதிகளுக்கு திருப்பி விட தாமிரபரணியாறு, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்தை 2009ம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்தார். 10 ஆண்டுகளாக இந்தத் திட்டம் எங்கிருந்தது என்றே தெரியவில்லை.
ஆனால் இப்போது அந்தத் திட்டத்தை துரிதப்படுத்தி வரும் அக்டோபரில் தண்ணீர் தர முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். சேர்வலாறு- பாபநாசம் அணைகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. மணிமுத்தாறு- பாபநாசம் அணைகளை இணைக்க நெல்லை தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். இதுபோல் பொய்கை ஆறு, நம்பியாறை இணைக்க நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தத் திட்டங்களுக்கு எந்த அளவு சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததும் நம் தமிழக முதல்வர் தான். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழக முதல்வர் பொறுப்பேற்ற போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜனுக்காக நாம் பட்ட பாடு உங்களுக்கே தெரியும். உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்க இயந்திரங்களை தந்தவர் முதல்வர்.
இதுபோல் கூடங்குளம் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தயாரிக்க இயந்திரம் தந்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெண்கள் பயணிக்க இலவசம் என்ற திட்டத்தை முதல்வர் முதல் கையெழுத்தாக இட்டார். மாணவர் நலனில் அக்கறை கொண்டு அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பறை ஸ்மார்ட் வகுப்பறையாக இருக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கும். உலகத்திலேயே ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தந்தது, தமிழக முதல்வர் தான்.
தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர், கொற்கை, துலுக்கர்பட்டி என எத்தனையோ நதிக்கரை நாகரிகங்கள் உள்ளன. அவற்றை பெருமைப்படுத்தும் வகையில் ரூ.33 கோடியில் நெல்லையில் அரசு பொருநை அரசு அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அருகே முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் ஒரு நூலகம் கட்டித் தர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.