மதுரை: பாரம்பரிய மேய்ச்சலில் வளர்க்கப்படும் கிடை மாடுகளின் சாணத்தை மதுரையில் இயங்கிவரும் தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மாதந்தோறும் 50 டன் மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.
மேய்ச்சல் தொழிலில் இருந்துதான் நாகரிகம் தொடங்குகிறது. வேளாண்மை உள்பட பல்வேறு தேவைகளுக்காக மனிதர்கள் வளர்ப்பு விலங்காக ஆடு, மாடுகள் வளர்த்தனர். மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தற்போது 90,000-க்கும் அதிகமான கிடை மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை பராமரிப்போர் 90,000 பேரை ஒருங்கிணைத்து நபார்டு வங்கி உதவியோடு மதுரையில் தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இவர்கள், கிடை மாட்டுச் சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் (பத்தி, விபூதி, சாம்பிராணி, விளக்கு, பூச்சிகொல்லி, எருவாட்டி, தொழுவுரம்) தயாரித்து வருகின்றனர். மேலும், இந்த அமைப்பினர், பாரம்பரிய மேய்ச்சல் முறையை பின்பற்றி வளர்க்கப்படும் கிடை மாடு மற்றும் கிடை ஆடுகளின் கழிவுகளில் இருந்து கிடைக்கும் ‘தொழுஉரம்’ குறித்தும் அதன் பயன்கள் குறித்து இயற்கை வேளாண் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் தற்போது பாரம்பரிய மேய்ச்சலில் வளர்க்கப்படும் கிடை மாடுகளின் சாணத்தை மதுரையில் இருந்து மாதந்தோறும் 50 டன் மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்வதை நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளனர்.
மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்த கிடை மாடுகளின் சாணத்தை நபார்டு வங்கியின் தமிழக மேலாளர் வெங்கடகிருஷ்ணன் தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் வேளாண்மை கல்லூரி டீன் மகேந்திரன், பேராசிரியர் பால்பாண்டி, பேராசிரியர் காஞ்சனா, இயக்குனர் சோமசுந்தரம், நபார்டு மதுரை மண்டல மேலாளர் சக்தி பாலன், தொழுவம் நிர்வாகிகள் சுரேஷ், முத்துக்குமார், விவேக் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கபிலன் கூறுகையில், ”தமிழ் நிலத்தில் சங்க காலம் தொட்டு பாரம்பரிய மேய்ச்சல் முறையை பின்பற்றி அனாதைகளாக அலைந்து திரியும் 750 கீதாரிகள் மற்றும் இந்நிறுவனம் விவசாய நிலங்களில் பாரம்பரிய கிடை அமர்த்துதல், இயற்கை உரம், பால் மதிப்பு கூட்டு பொருட்கள், சாண மதிப்பு கூட்டு பொருட்களை தரமுடன் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
மேய்ச்சல் பொறம்போக்கு நிலங்களில் கிடை மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதால் பல்லுயிர் பெருக்க சமநிலை, கார்பன் தடம் குறைப்பு, மண்ணை வளப்படுத்த இரவு நேரங்களில் விளை நிலங்களில் கிடை அமர்த்துதல், இயற்கை வேளாண்மை தேவையான உரங்கள் ஆகியவை தனித்துவமான மேய்ச்சலில் ஈடுபடும் மாடுகளால் நமக்கு கிடைக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். தற்போது மாலத்தீவில் சில நிறுவனங்கள் ‘பயோ காஸ்’ தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு தேவையான மூல பொருட்கள் மேய்ச்சல் ஈடுபடும் கிடை மாடுகளின் சாணத்தில் இருப்பதையறிந்து மதுரை தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திலிருந்து மாதம் தோறும் 50 டன் சாணம் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.