சென்னை: தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர் பொன்னியின் செல்வன் படம் குறித்து வியப்பாக பேசியுள்ளார். தெலுங்கில் ராம் சரணின் 15வது படம், தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படங்களை ஷங்கர் தற்போது இயக்கி வருகிறார்.
இந்நிலையில், அவர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பிஸியான மோடில் ஷங்கர்
கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை தொடங்கிய ஷங்கருக்கு அடுத்தடுத்து சோதனை வந்தது. இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து, பட்ஜெட் பிரச்சினை என விழி பிதுங்கி நின்றவர், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தில் கமிட் ஆனார். இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படமும் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. இதனால், ஒருபக்கம் ராம்சரண் படம், இன்னொருபுறம் இந்தியன் 2 என படுபிசியாக வ்லம் வருகிறார் ஷங்கர். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சினிமா ரசிகனாக வெயிட்டிங்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் 30ம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகிறது. எம்ஜிஆர், கமல், ரஜினி என பலரது கனவுப் படமாக இருந்த பொன்னியின் செல்வன், தற்போது வெளியாகவுள்ளது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஷங்கர், சினிமா ரசிகனாக நானும் ரொம்ப ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மணிரத்னம் ரசிகனான ஷங்கர்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஷங்கர், “முதன்முதலாக மணிரத்னம் சார் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கப் போகிறார் என்று கூறியதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனா இது நல்லா இருக்கே என்று நினைத்தேன். படம் எப்ப வரும்ன்னு மிகவும் எதிர்பார்த்து இருந்தேன். இறுதியில் இப்போது வரவுள்ளது. தமிழ் சினிமா ரசிகனா, மணிரத்னம் சார் ரசிகனா பொன்னியின் செல்வன் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லிங்குசாமியின் எதிர்பார்ப்பு
பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமியும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆரிடம் இருந்து தொடங்கிய பொன்னியின் செல்வன் கனவுப் பயணம், இப்போது மணிரத்னம் சார் இயக்கத்தில் நனவாகியுள்ளது. இந்தப் படத்தை பார்க்க ரொம்பவே ஆவலாக இருக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் கொடுத்த வைத்தவர்கள். பொன்னியின் செல்வனில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனக் கூறினார்.