எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலை நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து சந்திக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தப் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலை நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து சந்திக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், ”நாம் ஒன்றுபடுவோம். நிதிஷ், அகிலேஷ், ஹேமந்த் மற்றும் நாங்கள் அனைவரும் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அரசியல் ஒரு போர்க்களம். நாங்கள் 34 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பாஜக ஜார்க்கண்டை விற்றுக் கொண்டிருக்கிறது. கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள அனுப்ரதா மண்டல் ஒரு தைரியசாலி. அவர் விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார். பெரிய தலைவர்களை கைது செய்தால், தொழிலாளர்கள் பயப்படுவார்கள் என்று அவர்கள் (பாஜக) நினைக்கிறார்கள்.
நேதாஜி சிலையை இரவு 7 மணிக்கு பிரதமர் திறந்து வைப்பார் என்றும் மாலை 6 மணிக்குள் நீங்கள் அங்கு வர வேண்டும் என்றும் துணை செயலாளர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். நான் என்ன கொத்தடிமைத் தொழிலாளியா? ஒரு துணைச் செயலாளர் மாநில முதலமைச்சருக்கு எழுத முடியுமா? நான் இப்போது ரெட் ரோட்டில் உள்ள நேதாஜி சிலைக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன்,” என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: `ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடலாம்’- ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM