பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆறு நாள்கள் தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டது பேசுபொருளாகியிருக்கிறது. ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. இந்த நிலையில், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, “அரசு PSPCL-க்கு மின்சார மானியமாக ரூ.600 கோடியும், சுகர்ஃபெட் நிறுவனத்துக்கு ரூ.75 கோடியும் வழங்கியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த மூழ்கும் நிதி/உத்தரவாத மீட்பு நிதி வழிகாட்டுதல்களின்படி சிறப்பு திட்டத்தை புதுப்பிக்க மாநிலம் தயாராகி வருவதால், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
மாநிலத்தின் நிதி ஆரோக்கியம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கருவூலத் தொகை ரூ.3,400 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஊதியம் தாமதமாக வழங்க மிக முக்கிய காரணம் 9,000 ஊழியர்களை முறைப்படுத்த மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்ததால், அதைச் செயலாக்கத்தில் சிக்கல் இருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் ஒருங்கிணைந்த மூழ்கும் நிதியில் 2,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்த ஒரே மாநிலம் பஞ்சாப் மட்டுமே” என விளக்கமளித்தார்.
ஆனாலும், எதிர்க்கட்சிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘இந்தியா உலகின் நம்பர் 1’ பிரசாரம் குறித்து கேள்வி எழுப்பி, நிதிப் பற்றாக்குறையால் பஞ்சாப்பில் உள்ள ஆம் ஆத்மி அரசாங்கத்தால் ஆகஸ்ட் மாதத்திற்கான தன்னுடைய ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியவில்லை என்ற செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டிவருகின்றனர். அந்த வகையில், சட்ட அமைச்சர் கிரன் ரிஜுஜு தனது ட்விட்டர் பக்கத்தில், “அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை உலகின் நம்பர் 1 மாநிலமாக்க விரும்புகிறார், ஆனால் அவர் ஒரு வருடத்துக்குள் பஞ்சாப்புக்கு என்ன செய்தார்? ஆம் ஆத்மி கட்சியும், பகவந்த் மான் அரசாங்கமும் பெரிய வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், பஞ்சாப்பில் பல வருடங்களாக நலிவடைந்த நிலையில் உள்ளவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.