வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் , சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி ஆட்சி பெரும்பாலான நேரங்களில் அவமானப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், பெண் கவர்னர் என்றும் பாராமல் பாகுபாடு காட்டி வருகிறது எனக்கூறியுள்ளார்.
தெலுங்கானா கவர்னராக பதவியேற்ற 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், பல முறை அழைப்பு விடுத்தும் முதல்வர் சந்திரசேகர ராவ், கவர்னர் மாளிகைக்கு வர மறுக்கிறார். உண்மையான அன்பு மற்றும் மனதுடன் மக்களுக்கு பணியாற்ற விரும்பினேன். ஆனால் அந்த முயற்சிக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டது. எனது நடவடிக்கைகளில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது. நான் சர்ச்சைக்குரிய நபரும் அல்ல. நான் ஆக்கப்பூர்வமான மனிதன்.
சிறந்த நட்புணர்வு அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும். திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளாதது தவறு. நான் புதுச்சேரி கவர்னர் என்ற முறையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த கூட்டத்தில் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலம் சார்ந்த 75 சதவீத பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இருந்தார். அனைத்து முதல்வர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை.
இந்த கூட்டத்தில் அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்க தயாராக இருந்த நிலையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை மறந்து விடுகின்றனர்.குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவும், மாநில மக்களுக்கு உரையாற்றவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள் காட்டி கவர்னர் மாளிகையிலேயே தேசியக்கொடி ஏற்றும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின அணிவகுப்பு நடந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது.
மக்களுக்கு உரையாற்றுவது தொடர்பாக அதிகாரிகளை அணுகிய போது எந்த பதிலும் இல்லை. இதனால், நானே உரை தயாரித்து அதனை பேசினேன். பேசுவதற்கு உரை தராவிட்டால் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். பேச எனக்கு உரிமை இல்லையா? அவர்கள் பேசுவதை மட்டும் தான்நான் பேச வேண்டுமா?
முதல்வர், அக்கட்சி எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் மாளிகைக்கு வருவதில் என்ன தடை உள்ளது. கவர்னர் மாளிகை என தீண்டத்தகாத இடமா? அரசியல்வாதியாக இருந்த போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். தற்போது கவர்னர் பதவி வகிக்கும் போதும் விமர்சிக்கப்படுகிறேன். நான் வலிமையான நபர். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை யாராலும் தடுக்க முடியாது.ஆன்மிக யாத்திரை ஒன்றில் பங்கேற்க ஹெலிகாப்டர் கேட்ட போதும் கடைசி நிமிடம் வரை தரவில்லை. சாலை மார்க்கமாகவே சென்றேன்.
கவர்னர் மாளிகை பல முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு செல்லும் போது, கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் வழிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. இதற்கான உத்தரவு எங்கிருந்து வருகிறது என எனக்கு தெரியாது. அவர்கள் வராதது எனக்கு கவலை கிடையாது. மாநில அரசில் உள்ள சில பிரச்னைகளை எடுத்துக்கூறினேன். ஆனால், அதனை அவர்கள் எடுத்து கொண்டார்களா அல்லது இல்லையா என்பது தெரியாது. அங்கும், இங்கும் கவர்னர் செல்லக்கூடாது எனக்கூறுகின்றனர். ஆனால், கவர்னருக்கு என எந்த எல்லை கிடையாது. மக்களுக்கு பணியாற்றுவதே எனது நோக்கம். ஒருபெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement