கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் முதலியான படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீட் தேர்வு தற்கொலைகள்
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லஷனா ஸ்வேதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம், பெற்றோர்கள் மட்டுமின்றி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகுவதற்கு முன்பு, தோல்வி பயத்தால் தென்காசியை சேர்ந்த ராஜலெட்சுமி என்ற மாணவி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தேர்வு முடிவுகள் வந்து, தோல்வி அடைந்ததால் சென்னை மாணவி தற்கொலை செய்துள்ளது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததால்தான், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
விலையில்லா மிதிவண்டிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் சர்வணகுமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருக்கோவிலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அனைவருக்கும் உயர்கல்வி
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, திமுக அரசுதான் அனைத்து தரப்பினருக்கும் உயர்கல்வி கிடைக்க வழி வகை செய்ததது. ஒரு காலத்தில் உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த உயர் கல்வி, கலைஞரின் தீவிர முயற்சியால் அனைத்து தரப்பினருக்கும் தற்போது கிடைத்து வருகிறது.
கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு
கடந்த திமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் 77 சதவீதம் பேர் பயன் பெற்றனர். ஆனால், தற்போதைய மத்திய அரசு நீட் தேர்வு கொண்டு வந்தததால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்வி குறியாகியுள்ளது என அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.
நகராட்சிக்கு கட்டிடத்திற்கு அடிக்கல்
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி, திருக்கோவிலூர் நகரமன்றத் தலைவர் முருகன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.