ஒரே ஆண்டில் 82,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்க தூதரகம் புதிய சாதனை!

அமெரிக்க தூதரகம் நடப்பு ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் விசா வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 2022ல் இதுவரை இல்லாத அளவுக்கு 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்துள்ளது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் மாணவர் விசாக்கள் மிக அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகமும், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள நான்கு துணைத் தூதரகங்களும் மே 10 முதல் மாணவர் விசா விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்தன.

image
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் (பொறுப்பு) பாட்ரிசியா லசினா, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் இந்த சாதனையைப் பாராட்டினார். “கொரோனா பெருந்தொற்றால் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு பல மாணவர்கள் விசாக்களைப் பெற்று  தங்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு கோடைக்காலத்தில் மட்டும் 82 ஆயிரத்திற்கும் அதிகமான‌ மாணவர் விசாக்களை வழங்கியுள்ளோம்.
கடந்த ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் உயர்கல்விக்காக மிகவும் விரும்பப்படும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது என்பதையே இது காட்டுகிறது. மேலும், தற்போதைய மற்றும் எதிர்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூட்டாக இணைந்து பணியாற்றுவதற்கும், இருநாடுகளுக்கும் இடையில் உள்ள நீண்டகால நட்புறவு மேலும் வலுவடைதற்குமான‌ இந்திய மாணவர்களின் பங்களிப்பிற்கு இது வழி வகுக்கிறது,” என்று அவர் கூறினார்.

image
விசா துறையின் அமைச்சக ஆலோசக‌ர் டான் ஹெஃப்ளின் கூறுகையில், “இந்திய மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு பங்களிக்க முடிந்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதனால் ஏராளமான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். சர்வதேச மாணவர்கள் அதிகளவில் அமெரிக்காவில் பயில்வது அமெரிக்க பொது உறவு நயத்தின் மையமாக விளங்குகிறது. இந்த ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா வரும் இந்திய மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் சுமார் 20%  பேர் இந்திய மாணவர்கள் ஆவர். 2020-21 கல்வியாண்டில் 1,67,582 இந்திய மாணவர்கள் மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்துள்ளனர் என்று 2021 ஆண்டின் ஓப்பன் டோர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

image
உலகளாவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட சர்வதேச மாணவர்களை அமெரிக்கா வரவேற்றது.  அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்கள் நேரிலும், இணைய வழியிலும், அதிநவீன கற்பித்தல் முறைகள் மூலமாகவும் மேற்படிப்புக்கான வாய்ப்புக்களை சர்வதேச மாணவர்களுக்கு வழங்கின.

அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் அது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள  EducationUSA India செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து  தகவல்களையும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாகவே பெறலாம். அமெரிக்காவில் உயர்கல்வி பெற விரும்புபவர்களுக்கான முதல் படி இதுவே ஆகும்.

இதையும் படிக்க: `ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடலாம்’- ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.