பெங்களூரு: கர்நாட்க மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கடுமையாக பாதிக்கப்பட்டு, படகு விடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாடகளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பெங்களூரு மாநகரமே மழைநீரால் சூழப்பட்டு வெள்ளம்போல காட்சி அளிக்கிறது. எளிதாக கூறவேண்டுமானால், கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னை எப்படி வெள்ளக்காடாக மிதந்து மக்கள் பேரவலத்தை எதிர்கொண்டார்களோ அதுபோன்ற நிலையை இன்று பெங்களூரு சந்தித்துள்ளது. மழைநீரை வெளியேற்ற முடியாமல், பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமும், மாநில பாஜக அரசும் திணறி வருகிறது. இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூருவில், கடந்த 34 ஆண்டுகளில் கண்டிராத கனமழை பெய்ததால், சாலைகள், தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பலகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பிரமாண்டமான அடுக்குமாடி வீடுகளும் தண்ணீரில் மூழ்கின. அவர்களின் விலைஉயர்ந்த கார்கள் மழைநீரில் மூழ்கி கடுமையான சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணியில், படகுகளுடன் சேர்ந்து டிராக்டர்களும்பணியாற்றின. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில் பலரும் தங்களது மாளிகையிலிருந்து டிராக்டர் மூலமாகத்தான் வெளியேறிய அதிர்ச்சி சம்பவங்களும் அரங்கேறின.
தொடர் கனமழை பெய்ததால் சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ஓஆர்ஆர் பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டது. அங்குள்ள பிரபலமான மைக்ரோ சாஃப்ட், இன்டெல் உள்ளிட்ட பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களளின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டன. சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்திருக்கும் இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 10 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். கனமழை காரணமாக இந்த பகுதியே வெள்ளக்காடாக மாறின. இங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் வீடு திரும்ப முடியாத சூழல் உருவானது.
இவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர்மீட்பு துறை, காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் களத்தில் இறங்கினார். படகுகளிலும், ஜேசிபி மூலமும், டிராக்டர்கள் மூலம் அவர்களை மீட்டனர். அதுபோல குறைந்த அளவு மழைநீர் தேங்கிய இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு பலர் டிராக்டர் மூலம் பணிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. . 50 ரூபாய் கொடுத்து டிராக்டரில் அலுவலகத்துக்குச் செல்லும் நிலைக்கு பெங்களூரு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்
தொடா் மழை பெய்ததால், மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகளில் வெள்ளநீா் புகுந்ததால், மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாக நோ்ந்தது. தனி வீடுகள் மட்டுமல்லாது, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களிலும் வெள்ளநீா் புகுந்து விட்டதால், காா்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கிவிட்டன.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்களை செலுத்த முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாயினா். வீடுகளில் வெள்ளம்புகுந்த அவதிப்பட்ட மக்கள் டிராக்டா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதனையடுத்து, சாலைகள், குடியிருப்பு வளாகங்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, பெங்களூரு நகா் புதன்கிழமை கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பியது. சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளநீா் அப்புறப்படுத்தப்பட்டதால் வாகனங்களின் நடமாட்டமும் பெருகியது. அடுத்த சில நாட்களில் பெங்களூரில் வெள்ளநீா் முழுமையாக வடிந்து இயல்பு நிலை திரும்பிவிடும் என்று அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால், தற்போது இந்திய வானிலை மையம், மேலும் 2 நாட்கள் பெங்களூருவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. உள் கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில் சூறாவளி சுழற்சி நிலவி வருவதால் கன மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று (வியாழன்) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடலோர மற்றும் தெற்கு உட்புற கர்நாடகாவின் ஒரு சில இடங்களிலும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் கர்நாடகாவின் உட்புறத்திலும் கனமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் கடந்த நான்கு நாட்களில் 251.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 131.6 மி.மீ மழை பெய்தது, இது கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் 24 மணி நேர மழைப்பொழிவாகும். மேலும், செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை பெய்துள்ள மழை அளவானது சராசரியை விட 148 சதவீதம் அதிகமாகும், அதே நேரத்தில் பெங்களூரு நகரம் 168 சதவீத உபரி மழையைப் பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.