படித்த முட்டாள் என்று பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 67 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவிகள் உட்பட மொத்தம் 8477 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 8477 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4 கோடியே 30 லட்சத்து 52,661 மதிப்பிலான மிதிவண்டிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் கோரிக்கை விடுத்தது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள சரத்துகளை தெளிவாக படித்துப் பார்க்க வேண்டும். படித்து பார்க்க தெரியவில்லை என்றால் படித்த வழக்கறிஞர் ஒருவரிடம் அது பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர். அவர் படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார் என்று பதிலளித்தார்.

ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50,000 மின் இணைப்புகள் இன்னும் இரண்டு வார காலத்தில் தமிழக முதல்வர் துவக்கி வைப்பார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.