திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் மகன் விஷ்ணு (24). இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு வீட்டருகே உள்ள கசாப்புக் கடையில் வேலைப் பார்க்கும் முத்து (37) என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழியைக் கடித்துக் கொன்றதாக பிரச்னை எழுந்துள்ளது.
இதையடுத்து முத்து, விஷ்ணு வளர்த்து வரும் நாயைக் கொன்று விடுவதாக தகராறு செய்து மிரட்டியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்பகை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை விஷ்ணு வீட்டுக்குச் சென்ற முத்து, விஷ்ணுவின் தாய் லட்சுமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன் கோழியைக் கொன்றதற்காக ரூபாய் ஆயிரம் பணம் தரவேண்டும் என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அதன்பின் வீட்டிற்கு வந்த விஷ்ணுவிடம் அவர் தாயார் முத்து வந்து சென்ற தகவலைக் கூறியுள்ளார். அதையடுத்து, விஷ்ணு, லட்சுமி இருவரும் முத்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு விஷ்ணுவுக்கும், முத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்து தன் வீட்டில் மாடு உரிக்க வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுவின் வயிற்றில் குத்தினார்.
இதனால் படுகாயமடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். மகன் விஷ்ணு தன் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடி துடிப்பதை பார்த்த தாய் கதறி துடித்துள்ளார். இதையடுத்து விஷ்ணுவை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விஷ்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் முத்துவைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண் முன்னே மகன் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.