டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி உயர சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்துவைத்தார். அதேபோல புதுப்பிக்கப்பட்ட ராஜ்பாத் சாலைக்கு `கர்தவ்யா பாதை’ என மறுபெயரிடும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பு முறையாக இல்லாததால், தான் கலந்துகொள்ளவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கொல்கத்தாவில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய நிகழ்வு குறித்து துணைச் செயலாளரிடமிருந்து நேற்று கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் நேதாஜி சிலையை மாலை 7 மணிக்கு பிரதமர் திறந்து வைப்பார் என்றும், மாலை 6 மணிக்கு நீங்கள் அங்கு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, என்னை அவர்களின் வேலைக்காரி போல குறிப்பிட்டிருந்தார்கள். நான் அவர்களின் வேலைக்காரியல்ல.
ஒரு துணைச் செயலர் எப்படி முதலமைச்சருக்கு கடிதம் எழுத முடியும்? ஏன்? கலாசார அமைச்சர் பெரியவராகிவிட்டாரா….? எனவே, என்னை அவமரியாதை செய்ததால் அந்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் இன்று மதியம் இங்குள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இங்கு வருவது இதுவே முதன்முறையாகும். ஹசீனா ஜி என்னை சந்திக்க விரும்புவதாக கேள்விப்பட்டேன். அவர் குடும்பத்தினருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. வெளிநாட்டு விவகாரங்கள் அல்லது இருதரப்பு உறவுகள் பற்றி நான் பேச விரும்பவில்லை.
ஆனால், என்னை எந்த வெளிநாட்டு பிரமுகர்கள் சந்திக்க அழைத்தாலும், மத்திய அரசு அதைத் தடுக்க முயல்வதை நான் கவனித்தேன். நான் வெளிநாட்டுப் பிரமுகர்களைச் சந்திப்பதற்கு மத்திய அரசு ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.