டெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் யுத்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில் கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா, சீனா படைகள் தங்களது ராணுவத்தினரை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
சீனாவுடன் பேச்சுவார்த்தை
இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. இந்தியா- சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.அண்மையில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை செப்டம்பர் 2-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் லெப்டினன்ட் ஜென்ரல் சென் குப்தா பங்கேற்றார்.
படை வாபஸ் குறித்து விவாதம்
லடாக்கின் கிழக்குப்பகுதியில் படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பான அம்சங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக கூறப்பட்டஹ்டு. மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது எல்லைகளில் வெளிப்படைத்தன்மையாக இருதரப்பும் நடந்து கொள்வது; எல்லைகளில் இருதரப்பும் அமைதியை கடைபிடிப்பது ஆகியவை வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது எல்லைப் பகுதிகளில் நவீன கட்டமைப்புகளுடன் சீனா மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் இந்திய தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் ஆட்சேபமும் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் தீர்வு..
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், இருதரப்பு பேச்சுகளின் முந்தைய முடிவுகளை ஒருங்கிணைக்கவும், குளிர்காலம் உள்ளிட்ட பருவங்களில் மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க பயனுள்ள முயற்சிகளை எடுக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இருதரப்பும் நெருங்கிய தொடர்பில் இருக்கவும், ராணுவ மற்றும் ராஜாங்க வழிகள் மூலம் உரையாடலைப் பேணவும், மீதமுள்ள பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்கவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
படை வாபஸ் தொடக்கம்
இந்நிலையில் கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லைப் பகுதியில் இருதரப்பும் இந்திய-சீன ராணுவத்தினர் தமது படையினரை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 2, 2022 அன்று நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் நிலையிலான 16-வது சுற்று பேச்சுக்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்திய – சீன ராணுவத்தினர் தங்களது படை விலக்கலை தொடங்கியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.