புதுடெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட 144 தொகுதிகளில் வெல்ல வியூகம் வகுக்கும் பணியில் பாஜக ஈடுபட் டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின் போது நூலிழையில் வெற்றியை தவறவிட்ட தொகுதிகளில் வெற்றிபெற வியூகங்களை வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள பாஜகதலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வரும் 2024-ல் நடைபெறவுள்ள மக்களைவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலில் பல மாநிலங்களில் உள்ள கணிசமான தொகுதிகளில் பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
குறிப்பாக, மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு உட்பட்ட 144 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பை பாஜக நூலிழையில் தவறவிட்டது. அதுபோன்ற தொகுதிகளை கண்டறிந்து வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற வியூகங்களை வகுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ள தொகுதிகளில் பாஜகவின் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றை கண்டறிந்து வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வெற்றி பெறுவதற் கான வாய்ப்புகளை உள்ளடக்கிய மக்களைவை தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அமைச்சர் குழுக்களை அனுப்பி அங்குள்ள அரசியல் நிலவரத்தை ஆராயவும், தகுதியான வேட்பாளரை தேர்வு செய்யவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.