தி.மலை | சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள சுங்க வரிச் சாவடியை அகற்ற வலியுறுத்தி, சுங்கச்சாவடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் பேசும்போது, ”நாடு முழுவதும் சுங்க வரிச் சாவடியை அதிகரித்து, மக்களிடம் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொள்ளை அடிக்கிறது. விவசாயிகள் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில், சாலைகள் படுமோசமாக உள்ள நிலையில், சுங்க வரிச் சாவடியை அமைத்து பணம் பறிக்கின்றனர்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் மேற்கொண்ட நடவடிக்கையை போன்று, தமிழகத்தில் சுங்க வரிச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திருவண்ணாமலை தேரடி வீதியில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், அமைச்சராக உள்ள எ.வ.வேலு உறுதி அளித்தார்.

நீரோடையில் கட்டப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டிய சுங்க வரிச் சாவடி அலுவலகம். | படம்: இரா.தினேஷ்குமார்.

இப்போது அவர்தான், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ளார். அவர் உறுதி அளித்தது போல், சுங்க வரிச் சாவடிகளின் எண்ணிக்கையை, தமிழகத்தில் குறைக்க வேண்டும். திருவண்ணாமலை அருகே உள்ள சுங்க வரிச் சாவடியை அகற்ற வேண்டும். திமுகவுடன் நாங்கள் தோழமையுடன் உள்ளோம். அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை விட்டு கொடுக்க முடியாது. மக்கள் நலனுக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னேடுக்கும்” என்றார்.

அகற்றும் போராட்டத்தை அறிவிப்போம்: மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் பேசும்போது, ”நகர பகுதியில் இருந்து 10 கி.மீ., தொலைவுக்குதான், சுங்க வரிச் சாவடி அமைக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், திருவண்ணாமலை நகரில் இருந்து மிக அருகாமையிலேயே சுங்க வரிச் சாவடியை அமைத்துள்ளனர். மக்களிடம் பணம் பறிக்கவே, சுங்க வரிச் சாவடியை அமைத்துள்ளனர்.

இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள சுங்க வரிச் சாவடியை அகற்ற வேண்டும். அகற்றவில்லை என்றால், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சுங்க வரிச் சாவடியை அகற்றும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிக்கும். ஒப்பந்தத்தில் 4 கோடி ரூபாய் வசூலிப்பது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஒரு வாகனத்துக்கு ரூ.30 கோடி வரை வசூலிக்கப்படும். டெண்டர் எடுத்தது யார்? மக்களிடம் பறிக்கப்படும் பணம், எங்கே போகிறது என்பது மர்மமாக உள்ளது. இதனை மக்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். ஆட்சியர், ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர் என அனைவரும் சுங்க வரிச் சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதன்படி அகற்ற வேண்டும்” என்றார்.

நீரோடையில் அலுவலகம்: திருவண்ணாமலை நகர செயலாளர் பிரகலநாதன் பேசும்போது, ”நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளை, நீதிமன்றம் உத்தரவை மேற்கொள்காட்டி, இடிக்கப்படுகிறது. ஆனால் நீரோடையில் சுங்க வரிச் சாவடி கட்டப்பட்டுள்ளது. இதனை இடிக்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. நீரோடையில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க தவறினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்” என்றார்.

வட்டாட்சியர் பேச்சுவார்த்தை: இதையடுத்து சுங்க வரிச் சாவடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, திருவண்ணாமலை மாவட்ட பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்கள் மற்றும் விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர். இதனை, சுங்க வரிச் சாவடி அலுவலர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் இது குறித்து நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும் என்றனர்.

இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் சுரேஷ், ”வருவாய் துறை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சுங்க வரிச் சாவடி அலுவலர்கள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்தை வரும் 14-ம் தேதி நடத்தி சுமூக தீர்வு காண்பது என தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.