கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120.00 அடியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் முழு கொள்ளளவான 120.00 அடியாக உள்ளதால் அணையின் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது. அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 06.09.2022 அன்று காலை 10:30 முதல் 90,000 கனஅடி திறந்துவிடப்படும் எனவும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1,25,000 கனஅடி வரை அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப்பின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், பொதுமக்கள் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர் நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், கால்நடைகள் மேய்த்தல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது சுயபடங்களோ எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.