புதுடெல்லி: லடாக் எல்லையில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40 வீரர்களும் உயிரிழந்தனர். இதன்காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு லடாக்கின் பல்வேறு முனைகளில் படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும் லடாக்கின் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் வீரர்களும் முகாமிட்டிருந்தனர்.
இந்த சூழலில் கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா இடையே நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தையில் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி செப். 12-க்குள் இந்திய, சீன படை வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு பழைய நிலைக்கு திரும்புவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் திடீர் மாற்றம் ஏன்?
வரும் 15, 16-ம் தேதிகளில் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியும் மாநாட்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்படுகின்றன என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.