லண்டன் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, நேற்று முன்தினம் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ், இன்று அதிகாரப்பூர்வமாக மன்னராக பொறுப்பேற்க உள்ளார். ராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரண்மனையில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், முதுமை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் காலமானார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. அரச குடும்பத்து நெறிமுறைகளின் படி, ராணியின் உடல்நலக் குறைவு தொடர்பான நிகழ்வுகள், ‘ஆப்பரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படுகிறது.
ராணியின் உயிர் பிரிந்த தகவலை அவரது தனி செயலர், பிரதமர் லிஸ் டிரஸிடம் தெரிவித்தார். அப்போது, ‘லண்டன் பிரிட்ஜ் சரிந்தது’ என்ற வார்த்தைகளையே அவர் பயன்படுத்தினார். ராணியின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் மன்னராக, அவரது மகன் சார்லஸ் இன்று பொறுப்பேற்க உள்ளார்.இந்நிலையில், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரளாக வந்து, அரண்மனை வாயிலில் இறந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராணியின் மறைவுக்கு பின், 10 நாட்கள் கழித்தே இறுதிச் சடங்கு நடப்பது வழக்கம். இந்நிலையில், வரும் 19ல் இறுதிச் சடங்கு நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பார்லிமென்டின் பொது சபை நேற்று கூடி, ராணிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. எம்.பி.,க்கள் அனைவரும் தங்கள் இரங்கல் செய்தியை வாசித்தனர் பார்லி., அலுவல்கள் அனைத்தும் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படும்.இதை தொடர்ந்து, பிரதமரும், அமைச்சரவை குழுவும் புதிய மன்னரை சந்திக்கும்.ஸ்காட்லாந்து பால்மோரல் அரண்மனையில் ராணி உயிரிழந்ததால், அவரது உடல் ரயில் வாயிலாக லண்டன் எடுத்து வரப்படும்.
இதை, ‘ஆப்பரேஷன் யூனிகார்ன்’ என்று அழைக்கின்றனர். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து, லண்டன் பார்லி.,யான வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனைக்கு ராணியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்வு, ‘ஆப்பரேஷன் லயன்’ என்று அழைக்கப்படுகிறது. வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் அருகே உள்ள தேவாலயத்தில் முழு அரசு மரியாதையுடன் ராணியின் இறுதிச் சடங்குகள் நடக்கும்.
அடுத்த வாரிசு!
சார்லஸ், பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மன்னராகிறார். இவருக்கும், மறைந்த இளவரசி டயானாவுக்கும், வில்லியம்ஸ், ஹாரி என்ற இரு மகன்கள் உள்ளனர்.மூத்த மகனான வில்லியம்ஸ், தந்தைக்கு அடுத்தபடியாக மன்னராகும் தகுதியை பெறுகிறார். இவரது மூன்று குழந்தைகள் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசுகளாகி உள்ளனர்.இரண்டாவது மகன் ஹாரி, அரச குடும்பத்தைச் சேராத மேகன் மார்கெல் என்பவரை மணந்ததால், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினார். இவருக்கு சஸ்செக்ஸ் பிரபு என்ற பட்டம் உள்ளது. இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.
பாஸ்போர்ட் இன்றி பயணம்!
சார்லஸ் பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்ற பின், அவர் பாஸ்போர்ட் இன்றி எந்த நாட்டுக்கும் பயணிக்கும் தகுதியை பெறுகிறார். மேலும், பிரிட்டனில் கார் ஓட்ட அவருக்கு ஓட்டுனர் உரிமம் தேவையில்லை என்ற விலக்கும் நடைமுறையில் உள்ளது.அரச குடும்பத்தில் மன்னர் மற்றும் ராணி ஆகியோரது பிறந்த நாள் இரண்டு தேதிகளில் கொண்டாடப்படுவது வழக்கம். மறைந்த ராணி எலிசபெத்தின் முதல் பிறந்த நாள் ஏப்., 21ம் தேதியிலும், இரண்டாவது பிறந்த நாள் ஜூன் மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையிலும் கொண்டாடப்பட்டது; பொதுமக்களும் பங்கேற்பர். இதைப் போலவே, சார்லசும் இனி தன் பிறந்த நாளை இரண்டு தேதிகளில் கொண்டாடுவார்.
பிரிட்டனின் வயதான மன்னர்
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின், பிரிட்டனின் அடுத்த மன்னராக அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லஸ், 73, பதவியேற்கிறார். பிரிட்டன் வரலாற்றில் அதிக வயதில் மன்னராவது இவர் தான். இதற்கு முன், நான்காம் வில்லியம்ஸ் 1830ல் தன் 64 வயதில் மன்னராக முடிசூடியிருந்தார்.சார்லசின் பின்னணி:1948 நவ., 14: சார்லஸ் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில் பிறந்தார். இவர், மன்னர் பிலிப் – ராணி இரண்டாம் எலிசபெத் தம்பதியின் மூத்த மகன் இளம் வயதில் ‘போலோ’ விளையாட்டில் பங்கேற்றார். பல முறை குதிரையில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் எம்.ஏ., படிப்பை முடித்தார்.
அரச குடும்பத்தில் இருந்து முதன்முறையாக பல்கலைக்கு சென்று படித்தார். இதற்கு முன், அரச குடும்பத்தினர் வீட்டிலேயே கல்வி கற்றனர் 1968: வேல்ஸ் இளவரசரானார் 1971 – 1976: பிரிட்டன் விமானப்படை, கப்பல்படையில் பணியாற்றினார் 1976: ‘தி பிரின்ஸ் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கினார். இது, ஆதரவற்ற இளைஞர்கள் கல்வி பயில்வதற்கு உதவுகிறது 1977: முதன்முறையாக டயானாவை சந்தித்தார் 1981: டயானாவை திருமணம் செய்தார் 1982 ஜூன் 21: வில்லியம்ஸ் பிறந்தார்.
அடுத்து இவர் தான் மன்னர் ஆவார் 1984 செப்., 15: ஹாரி பிறந்தார் 1996: டயானாவுடன் விவாகரத்து ஆனது 1997 ஆக., 31: கார் விபத்தில் டயானா உயிரிழந்தார் 2005: கமீலாவை திருமணம் செய்தார் 2018: சார்லசை, 54 நாடுகளைச் சேர்ந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவராக, ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்தார் பல புத்தகங்களை எழுதியுள்ளார் அரச குடும்பத்தின் பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.
பிரிட்டன் தவிர ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உட்பட 15 காமன்வெல்த் நாடுகளின் மன்னராகவும் இருப்பார் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் விதமாக பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவித்தார். பிரிட்டன் அரச குடும்பத்துக்கு சொந்தமான ‘டச் ஆப் கார்னிவல்’ எஸ்டேட்டின் மேனேஜராக இருந்த இவர், அங்கு பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவித்தார்; இதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார் ஓமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவத்தை ஆதரித்தார்.
அரசு முறை துக்கம்
ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி, நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றைக்கு, நாடு முழுதும் உள்ள அரசு கட்டடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.
ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி, நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றைக்கு, நாடு முழுதும் உள்ள அரசு கட்டடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்