சென்னை: சர்க்கார் திரைப்படத்தின் கதை திருட்டு பிரச்சனையில் இயக்குநர் பாக்யராஜ் எடுத்த முடிவு பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் தள்ளியது.
வளர்ந்து வரும் உதவி மற்றும் துணை இயக்குநர்களுக்கு பாக்யராஜ் ஒரு ஆபத் பாண்டவராக தென்பட்டார்.
ஆனால் திரைத்துறையில் இருக்கும் அரசியலால் இப்போது மீண்டும் தலைவர் பதவிக்கான தேர்தலை சந்திக்கவிருக்கிறார்.
சிகப்பு ரோஜாக்கள் ஏமாற்றம்
சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் பாக்யராஜ் வசனகர்த்தாவாக பணியாற்றினார். ஒரு காட்சியிலும் நடித்திருப்பார். அவர் எழுதிய வசனங்களை பார்த்த கமல் ஹாசன் பிற்காலத்தில் இவர் பெரிய இயக்குநர் ஆவார் என்று கூறினாராம். ஆனால் சிலருடைய கவனக்குறைவால் அந்த படத்தின் டைட்டில் கார்டில் வசனம் பாக்யராஜ் என்று இடம் பெறவில்லை. அதற்கு காரணம் பாரதிராஜா அவர்களும் இல்லை. திரையரங்கில் படத்தை பார்த்த பாக்யராஜிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டதாம். அதன் பின்னர் அவருடைய குருநாதர் பாரதிராஜாவிடம் பேசுவதையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
நடிகனாக்கிய குருநாதர்
அப்படி இருந்த சூழ்நிலையில்தான் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் பணிகள் நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய ஊர்கார நண்பன் கங்கை அமரனை அதில் கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என்ற திட்டத்தில் இருந்த பாரதிராஜாவிற்கு இப்போது பாக்யராஜை சமாதானப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே பாக்கியராஜை அழைத்துள்ளார். வசனம் எழுதத்தான் கூப்பிடுகிறாரோ என்று பாக்யராஜும் சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் புதிய வார்ப்புகள் படத்தின் கதாநாயகன் நீதான் என்று பாரதிராஜா கூற, மூன்று படங்கள் இயக்கி வெற்றி பெற்று பணம் சம்பாதித்துள்ளீர்கள். இப்போது சொந்த தயாரிப்பில் புதிய வார்ப்புகள் எடுக்கிறீர்கள். அதில் என்னை கதாநாயகனாக போட்டு சம்பாதித்த பணத்தை இழந்துவிடாதீர்கள் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
பாரதிராஜாவின் நம்பிக்கை
ஆனால் உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் நடிக்க வேண்டும் என்று பாக்யராஜை கதாநாயகன் ஆக்கியது மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் அந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தார். கங்கை அமரன் பாக்யராஜிற்கு டப்பிங் பேசினார். அதன் பின்னர் பாக்யராஜிற்கும் கங்கை அமரன் நல்ல நட்பு ஏற்பட்டு இருவரும் சில படங்களில் ஒன்றாக பயணித்தனர்.
புதிய வார்ப்புகள் கொடுத்த நம்பிக்கை
பாரதிராஜா அவர்கள் நினைத்தது போலவே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகனாக பாக்யராஜ் அவர்களுக்கும் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது. அந்தப் படம் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், தான் இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக கதாநாயகனாக பாக்யராஜ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.