புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசில் பழங்குடி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தி சேகரிக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம் சென்ற இணையதள செய்தி நிறுவன பத்திரிகையாளர் சித்திக் கப்பானை, வன்முறையை தூண்டுவதற்கு வந்ததாக கூறி தேசத் துரோக சட்டத்தின் கீழ் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். இவரது ஜாமீன் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி யுயு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கப்பானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.