புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி மாவட்டம், கொனார்க் பகுதியில் கடந்த 13-ம் நூற்றாண்டில் சூரிய பகவானுக்காக கோயில் கட்டப்பட்டது. கிழக்கு கங்கா வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயில் அறிவியல் பெட்டகமாக போற்றப்படுகிறது. கோயிலின் கருவறையை சுற்றி கல்லில் செதுக்கப்பட்ட 24 தேர் சக்கரங்கள் உள்ளன. இது 24 மணி நேரத்தை குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி நேரடியாக கருவறையின் மேல் விழும்படி கோயில் கட்டப்பட்டு உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது கோயிலின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. எனவே கோயிலை பாதுகாக்க கடந்த 1903-ம் ஆண்டில் கோயில் கருவறைக்குள் மணல் நிரப்பப்பட்டது. அதன் 4 வாயில்களும் மூடப்பட்டன. சுமார் 100 ஆண்டுக்கு முன்பு நிரப்பப்பட்ட மணலால் கோயில் கருவறை சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதுதொடர்பான வழக்கில், மணலை அகற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவியல்பூர்வமாக கோயில் கருவறையில் இருந்து மணலை அகற்றும் பணியை நேற்று முன்தினம் தொடங்கினர்.