அரசு பணத்தை சிக்கனமாக செலவிடுங்கள் – அரசு ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை

புதுடெல்லி; அரசு ஊழியர்கள் அரசு பணத்தை சொந்தப் பணம்போல சிக்கனமாகவும், கவனமாகவும் செலவழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைக்கான திட்டம் தயாரிப்பது தொடர்பான 2 நாள் மாநில அமைச்சர்கள் மாநாட்டை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் டெல்லியில் நேற்று நடத்தியது. இதில் மாநிலங்களின் பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது:

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், அரசுப் பணத்தை தங்கள் சொந்தப் பணம் போல் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். வீண் செலவுகளை குறைக்க வேண்டும். அரசு உயர் அதிகாரிகள், தங்களின் அரசுமுறை பயணங்களில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, அதில் உணவுக்கான கட்டணமும் இணைந்துள்ளது.

ஆனால், பெரும்பாலானோர் விமான பயணத்தில் சாப்பிடுவதில்லை. இதைப் பற்றி பலர் கண்டு கொள்வதே இல்லை. இதுபோன்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். நாம் நமது சொந்தப் பணத்தை செலவு செய்யும்போது கவனமாக இருக்கிறோம். அதுபோல், அரசு பணத்தை செலவு செய்யும்போதும், கவனமாக இருக்க வேண்டும்.

அரசு திட்டங்களை அமல்படுத்தும்போது, வீண் செலவினங்களை, அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் முகமைகள் தவிர்க்க வேண்டும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கட்டுமான செலவினங்களை குறைப்பதில் அரசு துறையினர் கவனம் செலுத்த வேண்டும். ஒருங்கிணைந்த திட்டத்தில் அரசு துறையினர் இடையே ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு ஆகியவை தேவை.

நாம் மற்றவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்க முடியும். நல்ல விஷயங்கள், யோசனைகளுக்கு யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. நான் அமைச்சர், எனக்கு எல்லாம் தெரியும், என்னைவிட யாரும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியாது, எனக்கு யார் கற்றுத்தர முடியும் என நான் நினைக்க கூடாது.

மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் புதிய யோசனைகளை தெரிவிக்க வேண்டும். அதையாரும் உடனடியாக கண்டுகொள்ளவில்லை என்றால் மனம் உடைந்து விடக்கூடாது. நான் எத்தனால் பற்றி பேசும்போது, இது சாத்தியமாகுமா என அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கேட்பர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். இன்று அனைவரும் எத்தனால் பற்றி பேசுகின்றனர். அது சாத்தியமாகி எரிபொருளில் கலக்கப்பட்டு வருகிறது. புதிய விஷயங்கள் சாத்தியமாகும். ஆனால் அதை சாத்தியமாக்க நமக்கு மற்றொருவர் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.