திருமலை: ஐதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ரூ.24.60 லட்சத்திற்கு ஏலம் போனது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் புகழ்பெற்ற பாலாப்பூர் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது அதிக எடையிலான லட்டு படைக்கப்படுவது வழக்கம். தூய நெய், உலர்ந்த பழங்களால் செய்யப்பட்ட லட்டுவின் மீது தங்க முலாம் பூசப்பட்டு, விநாயகர் முன்பு வெள்ளி கிண்ணத்தில் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்படும். 10வது நாள் விநாயகர் விஜர்சனம் செய்வதற்கு முன்பு லட்டுவை பொதுவெளியில் ஏலமிடுவார்கள். இதன் ஆரம்ப விலை நூற்றுக்கணக்கில் தொடங்கி பின்னர் லட்சக்கணக்கில் முடிவது வழக்கம். நேற்றும் இந்த லட்டு ஏலமிடப்பட்டது. முதலில் ரூ.1,116 என ஏலம் தொடங்கியது. இறுதியில் பி.லட்சுமா என்பவர் ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு ரூ.18.90 லட்சத்துக்கு லட்டு ஏலம் போனது.