ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன் தினம் (செப்.8) மறைந்தார். அவரது மறைவை அடுத்து மூன்றாம் சார்லஸ் முறைப்படி மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒஹியோ மாகாணத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பைடன் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், சார்லஸை எனக்கு நன்றாகத் தெரியும். நான் இன்னும் அவரிடம் பேசவில்லை. ஆனால், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நான் நேரில் பங்கேற்பேன் என்றார்.

வெள்ளை மாளிகை அதிபரின் இங்கிலாந்து பயணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றது. இங்கிலாந்து அரசு முறைப்படி இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தகவலை அறிவித்தவுடன் அமெரிக்க அதிபர் பயண விவரங்கள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், முதல் குடிமகள் ஜில் பைடனும் வாஷிங்டன்னில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு சென்றனர். அங்கே அவர்கள் குறிப்பேட்டில் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் குறிப்பு எழுதினர். அதிபர் பைடன், “உங்கள் அனைவரின் சார்பில் நாங்களும் துக்கம் கடைபிடிக்கிறோம். ராணி எலிசபெத் ஒரு சிறந்த பெண்மணி. என் வாழ்வில் அவரை நான் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சியே” என்று எழுதினார். ஜில் பைடன், “உங்களுடன் எங்களின் எண்ணங்களை செலுத்துகிறோம்” என்று எழுதினார்.

பின்னர் இருவரும் கூட்டாக வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோன். அங்குள்ள மக்கள் தங்களின் தாயை, பாட்டியை, கொள்ளுப்பாட்டியை போன்ற ராணி எலிசபெத்தை இழந்து வாடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறோம். ராணியின் பெருமைகள் பிரிட்டிஷ் வரலாற்றில் இடம்பெறும். உலக நாடுகளுடனான பிரிட்டன் உறவைப் பேணுவதில் ராணியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடைசியாக ஜூன் 2021ல் நாங்கள் பிரிட்டன் சென்றிருந்தோம். அப்போது ராணி எலிசபெத் எங்களை கனிவுடன் வரவேற்றார். அந்த அன்பை நினைவுகூர்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.