புதுடெல்லி: நீதி கேட்டு குரல் எழுப்புவது எப்படி சட்டத்தின் பார்வையில் கிரிமினல் குற்றமாகும் என்று சித்திக் கப்பன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம் தேசிய கவனம் பெற்றுள்ளது. இந்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நடந்த வாதங்கள் வருமாறு:
தலைமை நீதிபதி: ஒவ்வொரு நபருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. மனுதாரர் சித்டிக் கப்பன், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதனால் அவர் அப்போது ஒலித்த ஒருமித்த குரலில் இணைந்திருக்கிறார். நீதி கேட்பது எப்படி கிரிமினல் குற்றமாகும்?
வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி: உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, சித்திக் கப்பனும் அவருடைய கூட்டாளிகளும் ஹத்ராஸுக்கு மத மோதல்களை உருவாக்கும் எண்ணத்துடனேயே சென்றனர். அவர்களிடம் டூல் கிட் இருந்தது.
நீதிபதிகள்: சித்திக் கப்பனிடம் நீங்கள் கைப்பற்றிய பொருட்களில் எது அவ்வாறாக வன்முறைகளைத் தூண்டுவதாக இருந்தது என்று சொல்ல முடியுமா?
வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி: அவர் வந்த வாகனத்தில் போராட்டங்களை ஊக்குவிக்கும் பிரச்சார துண்டு பிரசுரங்கள் இருந்தன.
நீதிபதிகள்: கடந்த 2012ல் டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் இந்தியா கேட் பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அதன் பின்னர் தான் சட்டத்தில் பெரிய மாற்றங்கள் வந்தன என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஜாமீன் வழங்குவது ஏன்? பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க முடிவு செய்திருப்பதாகக் கூறிய நீதிபதிகள், கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட பிரசுரங்கள் பற்றி இப்போது விமர்சிக்க விரும்பவில்லை. கைதான நபர் சிறையில் இருந்த காலத்தை இப்போது கருத்தில் கொள்கிறோம். அவரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடனே ஜாமீனில் விடுவிக்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுகிறோம்.
அதேபோல் சித்திக் கப்பன் இந்த ஜாமீன் காலத்தின் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் தொடர்பு கொள்ள முயலக் கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முதல் 6 வாரங்களுக்கு டெல்லி நிஜாமுதீன் காவல் நிலையத்தில் வாரம் ஒரு நாள் கையெழுத்திட வேண்டும். அதன் பின்னர் அவருடைய மலப்புரம் மாவட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவித்தனர்.
சித்திக் மனைவி பேட்டி: எத்தனை போராட்டங்கள்? அத்தனைக்கும் நடுவே இதை நான் சாதித்துள்ளேன். காரணம் எங்கள் பக்கத்தில் நியாயமும் உண்மையும் இருப்பதே. கப்பன் ஏதும் அறியாத நிரபராதி. அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே. இரண்டு ஆண்டுகள் போராட்டம். உத்தரப் பிரதேச அரசு அவரை சிறையில் வைத்திருந்தது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அவர் சிறையில் இருந்தது, எஙக்ளின் இரண்டாண்டு வாழ்க்கை, கப்பன் சந்தித்த துயரங்கள் எதுவுமே எளிதில் மறக்கக் கூடியது அல்ல. அவர் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1967 மற்றும் உபா சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act கீழ் கைது செய்யப்பட்டார். அதிலிருந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தது எனக்கு பெருமகிழ்ச்சி. இதுபோல் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
17 பக்க துண்டுப் பிரசுரம்: உத்தரப் பிரதேச அரசு காவல்துறை கப்பன் சென்ற வாகனத்தின் 17 பக்கங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களைக் கைப்பற்றினோம். அதில் எப்படி போராட்டங்களை நடத்துவது, எப்படி போலீஸிடமிருந்து தப்பிப்பது, போராட்டங்களை எங்கெல்லாம் நடத்தலாம் என்ற குறிப்புகளுடன் கூடிய டூல் கிட் இருந்தது என்று கூறப்பட்டது.
இந்தியாவும் டூல் கிட் சர்ச்சையும்: டூல் கிட் (Tool Kit) என்ற சொல் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் இருந்து விவாதப் பொருள ஆனடு. அப்போது, டூல் கிட் என்ற சொல்லை மையப்படுத்தி திஷா ரவி என்ற சூழலியல் செயல்பாட்டாளர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது. பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது, அதில் பங்கெடுப்பவர்களுக்கு அந்த பிரச்சாரத்தினை எப்படி முன்னோக்கி நகர்த்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய டூல் கிட் பயன்படுத்தப்படுகிறது. சித்திக் கப்பன் வழக்கில் உ.பி. போலீஸார் அவரை இந்த ரீதியிலேயே குற்றவாளியாக்க முயற்சித்துள்ளனர் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.