வேள்பாரி – தனுஷ் ஆசைப்பட்ட கதையில் சூர்யா?

மதுரை எம்.பி.யும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய சரித்திர நாவல் 'வேள்பாரி'. வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்த இந்த நாவல் ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நாவல்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் 14 இன மக்களுக்குத் தலைவனாக வேளிர் குலத்தைச் சேர்ந்த பாரி என்பவர் இருக்கிறார். அந்த மலைப் பகுதியைக் கைப்பற்ற குலசேகரப் பாண்டியன், சேர, சோழ மன்னர்களையும் தன்னுடைன் சேர்த்துக் கொண்டு போராடுகிறான். இந்த மூவேந்தர்களை எதிர்த்துப் போராடுகிறார் பாரி. அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் இந்த சரித்திர நாவலின் கதை.

இயற்கைக்கும், மனிதனின் பேராசைக்கும் இடையில் இப்போதும் நடந்து வரும் போராட்டத்தின் ஆதி வடிவம்தான் 'வேள்பாரி'. இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்க நடிகர் தனுஷ் முயற்சிப்பதாக 2019ம் ஆண்டே செய்திகள் வெளிவந்தது. அதற்கான பேச்சு வார்த்தைகளும் ஆரம்பமானதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின் அது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை. 2020ல் கொரோனா பரவிய காரணத்தால் கைவிடப்பட்டிருக்கலாம்.

இதனிடையே, தற்போது 'வேள்பாரி' நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாகவும், அதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற 'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் கூட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவரைப் பற்றிப் பேசிய சூர்யா, “காவல்கோட்டம், வேள்பாரி' தமிழர்களின் முக்கியமான மிகப்பெரிய ஒரு அடையாளம், மிகச் சிறந்த படைப்பு. ஒரு சுவாரசியமான பயணத்தை சு.வெங்கடேசன் அவர்களுடன் ஆரம்பித்துவிட்டோம். அதைப் பற்றி சீக்கிரமாகச் சொல்கிறேன். அது ஒரு முக்கிய பதிவாவும், பயணமாகவும் இருக்கும். விரைவில் அறிவிக்கிறேன்,” என்று பேசினார்.

சு.வெங்கடேசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற 'காவல் கோட்டம்' நாவல் தான் வசந்தபாலன் இயக்கத்தில் 'அரவான்' என்ற படமாக 2012ம் ஆண்டு வெளிவந்தது.

இதனிடையே, சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யாவின் 42வது படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. அதுவும் ஒரு சரித்திரப் படமாக உருவாகப் போகிறது. 'வேள்பாரி' திரைப்படத்திற்கு முன்னதாக தனது 42வது படத்தை ஒரு சோதனைப் படமாக சூர்யா நடிக்கிறாரோ என்ற ஒரு சந்தேகமும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.