2022-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தின் மழை பற்றிய அறிவிப்பினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
காவேரி டெல்டா பகுதிகளில் குறுவையை அறுவடை செய்தபின் உடனடியாக நடவு செய்ய நாற்றங்காலை தயார் செய்து வைப்பது உகந்தது. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் வடிகால் வசதி செய்வது மிக அவசியமானது.
தென்மாவட்டங்களில் மழை பொழிவு 50% முதல் 80% வரை அதிகமாக இருந்தது. இந்த மழை பொழிவு விவசாயம் செழிப்பாக வளர நல்ல அறிகுறியாக இருக்கிறது. இந்த பகுதிகளில் வாழை, கரும்பு போன்ற பயிர்களை அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் வாழை பயிர்களுக்கு முட்டு கொடுத்து சாயாமல் பார்த்து கொள்வது மிக அவசியம். கரும்பு சோகைகளை இணைத்து கட்டுவது மூலம் கரும்பு பயிருக்கு வரும் பாதிப்புகளை குறைக்கலாம்.
கடலூர் போன்ற வடகிழக்கு மாவட்டங்களில் அதிக மழை காரணமாக பயிர்கள் மூழ்கியுள்ளது. இதை தடுக்க நீர் வடிகால் அமைக்க வேண்டும். கடலூர் பகுதிகளில் அதிகமாக கரும்பு பயிரிட்டுள்ளனர். கரும்பு சோகைகளை இணைத்து கட்டுவது மூலம் அப்பயிருக்கு வரும் பாதிப்புகளை குறைக்கலாம். மேலும் இந்த பகுதிகளில் காய்கறிகளையும் அதிக பயிரிட்டுள்ளனர். காய்கறி பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேங்கியிருப்பது ஆகாது. அதனால் வடிகால் வசதி செய்வது மிக மிக அவசியம்.
வடமேற்கு மாவட்டங்களில் 123% அதிக மழை பொழிந்திருக்கிறது. இந்த பகுதிகளில் காய்கறி பயிர்கள் அதிகமாக விதைத்துள்ளனர். இந்த வயல்களில் தண்ணீரை வடித்து வெட்டாப்பு விட்டபின் உரமிடுவது நல்லது. இப்படி செய்வதால் விளைச்சலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
மேற்கு மாவட்டங்களில் சராசரிக்கும் அதிகமாகத்தான் மழை பெய்துள்ளது. ஆனால் இந்த மழை விளைச்சலுக்கு உதவுவதாக அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 700மி.மீ மழை பொழியும். ஆனால் இந்த ஆண்டு 1752 மி.மீ அதிக மழை பொழிந்துள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் சராசரியைவிட 27% குறைவாக மழை பொழிந்துள்ளது.`இந்த மழையினால் நிலத்தடி நீரும், நீரின் தன்மையும் அதிகரித்துள்ளது’ என்று விவசாயிகள் கூறினார்கள்.இதனால் விவசாயிகள் மகிழ்வுடன் இருக்கின்றனர். நீர்ப்பாசனம் அதிகம் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும் வடிகால் வசதி செய்வது மிக முக்கியம் ஆகும்” என்றார்.