புதுடெல்லி: அருணாச்சல பிரதேச எல்லை பகுதிகளில் சீனாவின் ராணுவ நடவடிக்கை அதிகமாகி வருவதால், அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், அதிநவீன ஆயுதங்களுடன் இந்திய ராணுவமும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு அருணாச்சல பிரதேச எல்லைகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராணுவ வாகனங்கள், இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராணுவ நிலைகள் அனைத்தும், ஆப்டிகல் பைபர் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு சீனாவின் ஊடுருவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சினூக் ரக போர் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கான ஹெலிபேட்களும் அமைக்கப்பட்டு வருகிறது. வீரர்கள், ராணுவ தளவாடங்கள், எரிபொருட்களை இப்பகுதிக்கு விரைவாக கொண்டு சேர்ப்பதை இது உதவியாக இருக்கும்.