ஒட்டன்சத்திரத்தில் குப்பை கொட்டும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

* நுண் உரக்குடில் அமைக்கும் பணி தீவிரம்
* தமிழக அரசு, அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் குப்பை கொட்டும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக நுண் உரக்குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற காந்தி மற்றும் காமராஜர் காய்கறி மார்க்கெட்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், திருமண மண்டபங்கள், நீதிமன்றங்கள், வேளாண் விற்பனைக்கூடம் உள்ளிட்டவைகளுக்கு அதிகளவில் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ- மாணவிகள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் அதிகளவில் குப்பைகள் சேர்ந்த வண்ணமாக இருந்து வந்தது. இந்த குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலேயே கொட்டி எரித்து வந்தனர். இதுகுறித்து அதிகளவில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பழநி பகுதிகளில் குப்பைகளை கொண்டு சென்று, கொட்டப்பட்டு வந்தது. அங்கும் எதிர்பு கிளம்பியதால், குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் நகராட்சி நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தது.

இந்நிலையில் குப்பை கொட்டுவதற்கு இடம் வேண்டி பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தனது தேர்தல் வாக்குறுதியில் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடம் தேர்வு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட காப்பிலியபட்டி ஊராட்சியில் தனது சொந்த நிதியிலிருந்து 18 ஏக்கர் 61 செண்டு நிலத்தினை வாங்கி, நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைப்பு செய்தார்.

இதுகுறித்து நகர்மன்ற துணை தலைவர் வெள்ளைச்சாமி கூறியதாவது, ‘ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு வரை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சின்னக்குளத்தில் கொட்டப்பட்டு வந்தது. சின்னக்குளத்தில் குப்பை கொட்டுவதை தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், நகரில் அந்ததந்த வார்டு பகுதிகளில் சேகாரமாகும் குப்பைகளை அந்தந்த பகுதிகளிலேயே தீ வைத்து எரித்து வந்தனர்.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நகராட்சிக்கு காப்பிலியபட்டி கிராமத்தில் தனது சொந்த நிதியில் வாங்கி கொடுத்த இடத்தில் தற்போது உரக்குடில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த உரக்குடிலில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் தார்சாலை, உரக்கிடங்கு, 1700 மீட்டரில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 15வது மத்திய நிதி ஆணையம் மானியத்தின் கீழ் புதிதாக 2 போர்வெல், 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, உரக்கிடங்கிற்கு தேவையான உலர் கழிவுகளை பேக்கிங் செய்ய பில்லிங் மிஷின் பொருத்துதல், உலர் கழிவுகளை சேமிக்கும் அறை, உரம் சேமிப்பதற்கான அறை மற்றும் அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது’ என்றார்.

ஒட்டன்சத்திரம் நகரின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று குப்பை கொட்டும்  பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்ட தமிழக அரசுக்கும், உணவுத்துறை அமைச்சர்  அர.சக்கரபாணிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இன்னும் 3 மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும்

இதுகுறித்து ஆணையாளர் தேவிகா கூறியதாவது, ‘நகர் பகுதிகளில் சுமார் 20 ஆண்டு காலமாக குப்பை கொட்டும் பிரச்னைக்கு தற்போது உணவுத்துறை அமைச்சரின் தீவிர முயற்சியால் நிரந்தர தீர்வு ஏற்பட்டு, உரக்குடில் அமைக்கும் பணி சுமார் ரூ.7 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முற்றிலும் நிறைவடைந்து 3 மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.