சென்னை – பெங்களூரு மற்றும் பெங்களூரு-மும்பை வழித்தடங்களில் பயண நேரத்தைக் குறைக்கும் திட்டங்களைத் துரிதப்படுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் அறிவுப் பகிர்வையும் மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்: பாரத் ஜோடோ யாத்திரை 2ஆவது நாள்: ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ டீமை சந்தித்த ராகுல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 2 மணி நேரமாகக் குறைக்கும்.
புனே-பெங்களூரு இடையே பசுமையான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, இது மும்பைக்கு ஏற்கனவே உள்ள எக்ஸ்பிரஸ்வேயுடன் இணைக்கப்படும். மும்பை மற்றும் பெங்களூரு இடையேயான தூரம் 7 சதவீதம் குறைக்கப்பட்டு, பயண நேரம் 6 மணி நேரமாக குறைக்கப்படும்.
பெங்களூரு-கடப்பா-விஜயவாடா நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் அனைத்தும் பெங்களூரு இணைப்பை மேம்படுத்தும். கர்நாடகாவின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பெங்களூரு போக்குவரத்து நெரிசல் என்பதை நான் அறிவேன். இது தொடர்பாக சில தீர்வுகளை நான் விவாதித்தேன். சாட்டிலைட் டவுன்ஷிப் ரிங் ரோடு நகருக்குள் நுழையும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் இணைக்கப் போகிறது, என்று கூறினார்.
பின்னர் மழைக்காலத்தில் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் சாலை இணைப்பில் ஏற்படும் இடையூறுகள் குறித்து கேட்டதற்கு, ஷிராடி காட் சாலையை அகலப்படுத்தும் திட்டம் இருப்பதாக நிதின் கட்கரி கூறினார்.
மேலும், நான்கு வழிச்சாலைக்கு காடுகளின் அனுமதியை பெற நாங்கள் காத்திருக்கிறோம். ஷிராடி காட் பகுதியில் நிலச்சரிவு பிரச்சனைகளை சமாளிக்க மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் குறித்து, அமைச்சகம் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைபிடிக்க தேர்வு செய்துள்ளது.
நாங்கள் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற முயற்சிக்கிறோம். நாங்கள் இப்போது ஒரு சாலை சுரங்கப்பாதையை உருவாக்கி, எதிர்காலத்தில் ரயில்வே மற்றொரு சுரங்கப்பாதையில் வேலை செய்யத் தொடங்கினால், அது நேரத்தையும் வளத்தையும் வீணடிக்கும். அதற்கு பதிலாக, ரயில்வேயும் சுரங்கப்பாதை அமைக்க முயன்றால், உடனடியாக திட்டத்தை செயல்படுத்துவோம், என்று நிதின் கட்கரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil