*தமிழக அரசு துரித நடவடிக்கை
*திருத்துறைப்பூண்டி நகர மக்கள் நன்றி
திருத்துறைப்பூண்டி : அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையம் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தற்போதைய அரசின் தீவிர நடவடிக்கையால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்துநிலையம் கட்டப்பட்ட பிறகு பழைய பேருந்துநிலையம் காலியாக கிடந்தது. அதன்பிறகு பெரியகோயில் வடக்கு வீதியில் கோயில் சுற்றுசுவர் ஒரமாக காய்கறி மார்கெட் 100 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அதன்பிறகு சுமார் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் 22 ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த கட்டிடத்தில் கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைத்து காய்கறி மார்க்கெட் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.
இதன் காரணமாக கட்டிடம் பழுதடைந்துள்ளது. கட்டிடத்தில் மரம், செடிகொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இந்த காய்கறி மார்கெட்டிற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இங்கு 38 கடைகளுக்கு மேல் இயங்கி வருகிறது.
மேலும் கூடுதல் கடைகள் கட்டும் அளவுக்கு பின்புறம் போதிய இடமும் உள்ளது. ஆனால் சீரமைக்கப்படாததால் வளாகம் முழுவதும் புதர் மண்டி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து வருகிறது. ஆனால் சேதம் அடைந்த கட்டிடத்தில் காய்கறி கடை இயங்கி வருகிறது. எனவே புதிதாக காய்கறி மார்கெட் கட்டவேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலை மீண்டும் திமுக ஆட்சி வந்தது. திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பதவியேற்றவுடன் புதிய காய்கறி மார்கெட் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் அரசு திட்ட மதிப்பீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசும் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரூ.2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தினசரி காய்கறி அங்காடி கட்டிடம், சிறு உணவகம், கழிவறை, தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. அரசின் தீவிர நடவடிக்கையால் காய்கறி அங்காடி கட்டிடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.