கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளதை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ வெளியிட்டு கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்து, கமல் நடித்த திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வேட்டையில் ஈடுபட்டது.
திரையரங்குகளில் நல்ல வசூலில் இருந்தபோதே கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. எனினும் ஒருசில திரையரங்குகளில் இன்னும் ‘விக்ரம்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகி 100 நாட்களை எட்டியுள்ளதை அடுத்து கமல்ஹாசன் சிறப்பு ஆடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் “வணக்கம். ரசிகர்களின் ஆதரவோடு ‘விக்ரம்’ திரைப்படம் நூறாவது நாளை எட்டி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். தலைமுறைகள் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கிறேன். ‘விக்ரம்’ வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷ்க்கு என் அன்பும், வாழ்த்தும்” இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
#100DaysofVikram #VikramRoaringSuccess pic.twitter.com/7SjZIpTB6M
— Kamal Haasan (@ikamalhaasan) September 10, 2022