* 100 ஆண்டுகளாக திருப்பணி நடத்தவில்லை என பக்தர்கள் புகார்
செய்துங்கநல்லூர் : தூத்துக்குடி மாவட்டத்தில் 100 ஆண்டு கடந்தும் திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து காணப்படும் நாணல்காடு சிவன் கோயிலில் திருப்பணி வேலைகளை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிறிய, பெரிய கோயில்கள் சுமார் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களுக்கு திருவிழா நடத்தவும், பூஜைகள் தங்குதடையின்றி நடத்தவும் மன்னர்கள் காலத்தில் தங்கம், வெள்ளி நகைகளும், நஞ்சை, புஞ்சை நிலங்களும் தானமாக வழங்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வாடகை, குத்தகையின் மூலம் பராமரிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதில் பல கோயில்களுக்கு சொத்துக்கள் இருந்தும் முறையாக பராமரிக்காமலும், வாடகை மற்றும் குத்தகை பாக்கிகளாக இருப்பதாலும் திருவிழாக்கள், பூஜைகள் நடத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நெல்லை – தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் நாணல்காட்டில் (தர்ப்பைகாடு) தாமிரபரணி நதிக்கரையில் திருகண்டீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கிழக்கு திசையில் சிவகாமி அம்பாள் உடனாய திருகண்டீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்க கொண்டு வாசுகி பாம்பை கயிறாக கொண்டு திருப்பாற்கடலை கடைந்த போது வாசுகி பாம்பு நஞ்சை கக்கியது. இதனால் உலக உயிர்கள் துன்பத்தில் துவளும் என்பதால் ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகினார். சிவனின் உடலில் சென்றால் உலகம் அழிவை சந்திக்கும் என்பதால் அம்பாள் பார்வதிதேவி ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார்.
இதனால் விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்தில் நின்றது. இதனால் ஈசன் திருகண்டீஸ்வரர் என பக்தர்களால் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்திலும் திருக்கண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அதேபோல் தென்னகத்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காட்டில் திருக்கண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளதால் இதனை தென்காஞ்சி எனவும் அழைக்கின்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோயில் தற்போது பராமரிப்பின்றி புதர்மண்டியும், கோபுரம் இல்லாமல் காட்சியளிக்கிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சுமார் 100 ஆண்டுகளை கடந்தும் திருப்பணிகள் நடத்தப்படவில்லை. கோயில் சுற்றுச்சுவர், மண்டபங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
இருந்தபோதும் இத்தலத்தில் உள்ள சிவனையும், சனிஸ்வரனையும் வெள்ளிக்கிழமை குரு ஓரை காலத்தில் அபிஷேகம் செய்து வேண்டினால் கேட்ட வரத்தை சுவாமி அருள்வதாக பக்தர்களிடம் ஐதீகம் உள்ளது. பவுர்ணமி, பிரதோச காலத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் சந்தானகோபால கிருஷ்ணர் சன்னதி உள்ளது. பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி இச்சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
இத்தகைய சிறப்புகளை உடைய இக்கோயிலை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி பராமரிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.