* டன்னுக்கு ₹5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
* வெட்டுக்கூலியை ஆலைகள் ஏற்க வேண்டும்
திருவண்ணாமலை : ஒன்றிய அரசு அறிவித்துள்ள கரும்பு கொள்முதல் விலை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, டன்னுக்கு ₹5 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். வெட்டுக்கூலியை ஆலைகளே ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் நெல், மணிலா, கரும்பு, வாழை, தோட்டக்கலை பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், கரும்பு முக்கிய சாகுபடியாக உள்ளது. சுமார் 5 லட்சம் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட கால பயிர், நிலையான வருமானம், ஒப்பந்த சாகுபடி என்பதால் உரிய காலத்தில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிடுகின்றனர்.
ஆண்டு முழுவதும் வியர்வை சிந்தி உழைத்து, கரும்பை விளைவித்தாலும், அதற்கான விலையை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிகளுக்கு இல்லை. கரும்பு கொள்முதல் விலையை, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுதான் நிர்ணயிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு அறிவிக்கும் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாவதில்லை. ஆலைகளின் நலன்களை முன்வைத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
எனவே, விவசாயிகளின் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்காமல் வஞ்சிக்கப்படுகின்றனர். உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துவிட்டது. உரம், இடு பொருட்கள் விலையேற்றம், கூலி உயர்வு, பெருவெள்ளம் அல்லது கடும் வறட்சி என்று விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம். ஆனாலும், வேறுவழியின்றி விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில், 24 தனியார் சர்க்கரை ஆலைகள், 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றை சார்ந்துதான், 5 லட்சம் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். ஆனால், விவசாயிகளின் நலனில் ஆலைகளும் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.
அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை முழுமையாக ஆலைகள் வழங்குவதில்லை, கரும்புக்கான தொகையை உடனுக்குடன் வழங்காமல் அலைகழிப்பது, நிலுவைத்தொகையை பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருப்பது, வெட்டு உத்தரவை உரிய காலத்தில் வழங்காமல் தாமதிப்பது என ஏராளமான குற்றச்சாட்டுகள் ஆலைகள் மீது வைக்கப்படுகிறது.
சாகுபடி செலவுக்கு தகுந்தபடி கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நிலுவையின்றி கொள்முதல் தொகை தர வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர். சாகுபடி செலவை கணக்கிட்டு டன்னுக்கு அதிகபட்சம் ₹5 ஆயிரம் விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் நீண்டகால கோரிக்கை.
ஆனால், இந்த ஆண்டு (2022-2023) கொள்முதல் விலையை 10.25 சதவீத பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ₹3,050 என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், அதிகபட்சம் 9.50 சதவீத பிழிதிறன் கிடைப்பதே அரிது. எனவே, தமிழக விவசாயிகளுக்கு டன்னுக்கு ₹2,821 விலைதான் கிடைக்கும்.
அதன்படி, 2021-2022ம் ஆண்டுக்கான விலையைவிட கூடுதலாக வெறும் ₹66 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பதால், விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த 2015-2016ம் ஆண்டு கரும்பு டன்னுக்கு ₹2,850 என விலை இருந்தது.
அதைத்தொடர்ந்து, கரும்பு கொள்முதல் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கரும்பு அரவை பருவம் தொடங்கும் முன்பு, முத்தரப்பு கூட்டம் நடத்தி விலையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவிசாய்ப்பதில்லை.
தேசிய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையமே விலையை பரிந்துரைக்கிறது. மேலும், அரசு ஏற்கனவே அறிவித்த கொள்முதல் விலையைகூட முழுமையாக வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் மட்டும், கடந்த 2014ம் ஆண்டு முதல் சுமார் ₹2 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு வழங்காமல் பல ஆண்டுகளாக ஆலைகள் நிலுவையில் வைத்துள்ளன.
அதோடு, நிர்வாக சீர்கேடுகளால் ஒருசில ஆலைகள் இழப்பை சந்தித்து, நலிவடைந்து அரவையை நிறுத்திவிட்டன. எனவே, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மறு சீரமைப்பது அவசியமாகும். கரும்பில் இருந்து சர்க்கரை மட்டுமின்றி, மொலாசஸ், ஒரு டன் கரும்பில் இருந்து மொலாசஸ், எத்தனால் என உபரி லாபம் ஆலைகளுக்கு கிடைக்கிறது. எனவே, லாரி வாடகையை ஆலைகள் ஏற்பது போல, கரும்பு வெட்டுக்கூலியையும் ஆலைகள் ஏற்க வேண்டும். அப்போதுதான், கரும்பு சாகுபடியை தமிழகத்தில் தக்கவைக்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்.
கரும்பு விவசாய சங்கங்களின்கோரிக்கைகள்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் கூறியதாவது: திருவண்ணாமலையில் அருணாச்சலம் சர்க்கரை ஆலை, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால், அந்த ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ₹11 கோடி இன்னமும் கிடைக்கவில்லை. ஆலையும் ஏலத்துக்கு வந்துவிட்டது.
ஆனால், விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு போளூர் தனியார் சர்க்கரை ஆலையும் நிர்வாக காரணங்களால் மூடிவிட்டனர். அந்த ஆலையும் பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை வைத்திருக்கிறது. எனவே, ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர அரசு முயற்சிக்க வேண்டும்.
தனியார் ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்க வேண்டிய எஸ்ஏபி நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும். அதேபோல், மகசூல், பிழிதிறன் அதிகம் கிடைக்கக்கூடிய புதிய ரகரங்களை கண்டுபிடித்து, மானியத்தில் விதை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். கரும்பு உற்பத்தி செலவு டன்னுக்கு ₹4 ஆயிரம் வரை ஆகிறது. எனவே, டன்னுக்கு ₹5 ஆயிரம் விலை வழங்குவதுதான் நியாயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைமீது தொங்கும் கத்தி
ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டம், விவசாயிகளின் தலைமீது தொங்கும் கத்தியாக மாறியிருக்கிறது. மாநில அரசுகள் வழங்கி வரும் இலவச மின் திட்டங்கள் ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்தத்தால் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. தமிழகத்தில், கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் சிறப்பான திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதன்மூலம்தான், தமிழகத்தில் சாகுபடி பரப்பு பெருகியது. உணவு தானிய உற்பத்தி அதிகரித்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.82 லட்சம் இலவச பம்புசெட் மின் இணைப்புகள் உள்ளன. அதை நம்பியே, இந்த மாவட்டத்தில் விவசாயம் நடக்கிறது. ஒன்றிய அரசின் புதிய நெருக்கடியால், இலவச மின்திட்டம் பறிபோகும் ஆபத்து நிகழ்ந்தால், விவசாயிகளின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறும்.
கரும்பு பிழிதிறன் சிக்கலால் அறிவித்த விலையும் கிடைக்காது
கரும்பு பிழிதிறன் கடந்த 1980ம் ஆண்டு 8 சதவீதம் இருந்தாலே போதுமானது என்றிருந்தது. இந்த நடைமுறை, சுமார் 25 ஆண்டுகள் வரை நீடித்தது. எனவே, அறிவிக்கப்படும் கொள்முதல் விலை விவசாயிகளுக்கு முழுமையாக கிடைத்தது. ஆனால், கடந்த 2006-2007ம் ஆண்டு 9 சதவீத பிழிதிறனாக ஒன்றிய அரசு உயர்த்தியது. அதைத்தொடர்ந்து, 9.5 சதவீத பிழிதிறனாகவும், கடந்த 2020-2021ம் ஆண்டு 10 சதவீத பிழிதிறனாகவும் உயர்த்தப்பட்டது.
மேலும், தற்போது கரும்பு பிழிதிறன்(கட்டுமானம்) 10.25 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியிருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 9 முதல் 9.5 சதவீத பிழிதிறன்தான் கிடைக்கும். எந்த மாவட்டத்திலும் கரும்பு பிழிதிறன் 10.25 சதவீதம் கிடைக்காது. எனவே, ஒன்றிய அரசு அறிவித்திருக்கிற விலையை விவசாயிகள் பெற முடியாது. எனவே, வேளாண் அறிஞர்களின் கருத்துக்களை கேட்டு, கள நிலவரத்தை அறிந்து, பிழிதிறனை நிர்ணயம் செய்யாமல், ஆண்டுதோறும் கரும்பு பிழிதிறனை உயர்த்தி விலை அறிவிப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்கின்றனர் விவசாயிகள்.