வெங்கட் பிரபு இயக்கத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சென்னை-600028’. சென்னையை சேர்ந்த இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டை சார்ந்து, அந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு வெங்கட் பிரபு அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கினார்.
முதல் பாகத்தில் இளைஞர்களாக இருந்த கதாபாத்திரங்கள், இரண்டாம் பாகத்தில் திருமணமானவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். மேலும், அதில் திருமணத்திற்கு பிறகு பழைய நாள்களைப் போன்று கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்பதை அந்த கதாபாத்திரங்கள் உணரும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். மனைவி, குழந்தை, பொருளாதாரச் சூழல், நண்பர்களின் பிரிவு என பல்வேறு காரணங்களால் அவர்களால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட இயலாது. கடைசியாக அனைத்து தடைகளையும் தாண்டி அவர்கள் கிரிக்கெட் தொடர் ஒன்றை வெல்வார்கள்.
எனவே, ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் விளையாடுவது மிகவும் கடினமானது என்றும் மனைவி குடும்பத்தினரின் ஆதரவின்றி அதை நடைமுறைப்படுத்த முடியாது என சொல்லப்பட்டிருக்கும். மேலும், ஆண்கள் தொடர்ந்து விளையாட அவர்களின் மனைவியின் அனுமதி மிக அவசியமானது. இதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் தங்களின் நண்பரின் திருமணத்தில், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மணமகளிடம் வைத்த கோரிக்கை மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும், இவர் கிரிக்கெட் விளையாடுவதிலும் கெட்டிக்காரர் என கூறப்படுகிறது. இவரது, ‘சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி’-ன் கேப்டனாகவும் உள்ளார்.
இந்நிலையில், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் ஹரி பிரசாத்திற்கும் நேற்று (செப். 9) உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது, பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் திருமணத்திற்கு பின்னரும் ஹரி பிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் ஹரி பிரசாத்தை கிரிக்கெட் விளையாட, மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்று ஒப்பந்த பத்தரத்தில் கையெழுத்திட வைத்து திருமண விழாவையே அதிர வைத்தனர்.
திருமணத்திற்கு பின்னர் மணமகன் விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் ஒரு சில சமயம் தடுக்கும் சூழலில், மணமகன் நண்பர்களின் இந்த ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.