பாரதியார் நினைவு நாள்: தமிழக அரசு செலுத்தும் மரியாதை!

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நாளை (செப்டம்பர் 11) காலை 9.30 மணியளவில், அமைச்சர்கள், சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

மகாகவி பாரதியார் 1882ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். சில காலம் காசியில் வசித்து வந்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1904 முதல் 1906 வரை சுதேச மித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார்.

மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல். சமூக, பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணாவால், மக்கள் கவி என்று அழைக்கப்பட்டார் மகாகவி பாரதியார். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் நாட்டுடைமையாக்கி, நினைவில்லமாக மாற்றினார். 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து கலைஞர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11, ‘மகாகவி நாள்’-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.

எனவே, சிறப்பு வாய்ந்த மகாகவி நாளான 11.09.2022 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.