*பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுகிறது
*முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடக்கம்
மேட்டூர் : மேட்டூர் காவிரியாற்றின் குறுக்கே அபாய பயணத்தை தவிர்க்கும் வகையில் ₹250 கோடி மதிப்பீட்டில் கோட்டையூர்-ஒட்டனூர் பாலம் கட்டுவதற்கான ஆய்வுகள் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் பல்லாண்டு கால கோரிக்கை நிறைவேறும் நிலை உருவாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர், பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டியில் இருந்து காவிரியின் மறுகரையில் உள்ள தர்மபுரி மாவட்டம் நாகமரை, ஒட்டனூர், ஏமனூருக்கு தினமும் விசைப்படகுகளில் மக்கள் பயணித்து வருகின்றனர். தொழில் நிமித்தமாக பொதுமக்கள் இந்த ஊர்களுக்கு பரிசல்களில் பயணிக்கின்றனர்.
விவசாயிகளும் தங்கள் விளைபொருட்களை இந்த பரிசலில் விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். அதே நேரத்தில் மேட்டூர், தர்மபுரிக்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் காவிரி கரையோர மக்களின் குழந்தைகளும் இந்த பயணம் மேற்கொள்கின்றனர். பெருமழைக்காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது பரிசல் சவாரி நிறுத்தப்படுகிறது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
படிப்பு தடைபடாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் 70கிலோ மீட்டர் சாலை வழிப்பயணமாக சுற்றி வரவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே பண்ணவாடி முதல் நாகமரை வரை 3கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதற்கு சாத்தியக்கூறுகள் இல்லாத நேரத்தில் கோட்டையூரில் இருந்து ஒட்டனூருக்கு 800மீட்டர் தூரத்தில் பாலம் கட்டவேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உருவெடுத்தது.
திமுக தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சமீபத்தில் காணொளி வாயிலாக நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது, பாலம் கட்டுவதற்கு ₹250கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார்.
இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பாலம் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த பாலம் அமைவதால் பொதுமக்களின் அபாய பயணம் முடிவுக்கு வருவதோடு, எதிர்கால வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோட்டையூரில் இருந்து தர்மபுரி மாவட்டம் ஒட்டனூருக்கு தரைவழிப்பயணமாக செல்ல வேண்டுமானால் 70கிலோ மீட்டர் சுற்றிவரவேண்டும்.
இதனால் பல்லாண்டுகளாக பரிசலில் இப்பகுதி மக்கள், 2கிலோ மீட்டர் நீர்வழிப்பாதையை கடந்து பயணித்து வருகின்றனர். ஆபத்தான இந்த பயணத்திற்கு முடிவு கட்டும் வகையில் தற்போது ₹250 கோடியில் காவிரியின் குறுக்கே பாலம் அமைக்கப்படவுள்ளது. புதிய பாலம் அமைவதால் இந்தநிலை மாறும் என்கின்றனர் சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் ‘‘கோட்டையூர் முதல் ஒட்டனூர்வரை 800 மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பாலம் அமைப்பதற்காக ₹250கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாலம் அமைப்பதற்கான ஆய்வுகள் தொடங்கியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த பாலம் எப்படி அமைய வேண்டும்? தற்போது கணக்கிடப்பட்டுள்ள தூரத்தை மேலும் அதிகரிக்க வேண்டுமா? நீராதாரத்தை பாதிக்காத வகையில் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. இது குறித்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் பணிகள் துவங்கப்படும்,’’ என்றனர்.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும்